சென்னை: பாஜகவினருக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டது அதிமுக என அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்துள்ளார். மதுரையில் நேற்று இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட்ட முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார் செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பங்கேற்ற சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.
அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது, அதிமுக எப்படி தன்னை அடிமைப்படுத்திக் கொள்கிறது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம். இந்த மாநாடு மேடையில் பாஜகவினர் பெரியார், அண்ணா, முன்னாள் முதல்வர்கள் எம் ஜி.ஆர், ஜெயலலிதாவை வசைபாடினார்கள். அவர்கள் அழைக்கின்ற ஒரு மேடையில் இவர்கள் போய் அமர்கிறார்கள் என்றால் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டார்கள் என்று அர்த்தம். திராவிடத்தையே அழிப்போம் என சூளுரைக்கும் எச் ராஜா அந்த மேடையில் தான் இருக்கிறார். திராவிடம் இனி தமிழகத்தில் கோலூன்ற முடியாது என அழுத்தம் திருத்தமாகச் சொன்ன அண்ணாமலை அந்த மேடையில் தான் இருந்தார். இம்மாநாட்டில் அதிமுகவினர் கலந்து கொண்டது வேதனையளிக்கிறது.
ஒட்டுமொத்தமாக நேற்று நடந்தது அரசியல் மாநாடு தான். அரசியல் வேறு ஆன்மீகம் வேறு என்பது எங்கள் முதல்வரின் நிலைப்பாடு அதில் என்றைக்கும் உறுதியாக இருப்போம். நேற்றைய மாநாடு கூடிக் கலைந்த மேகக்கூட்டம் போல நடைபெற்ற மாநாடு. கூடுகின்ற கூட்டம் வேறு, கூட்டுகின்ற கூட்டம் வேறு நேற்று நடந்தது கூட்டிய கூட்டம் ஒருநாள் கூத்து அது நேற்றோடு முடிந்தது என்றார். இந்த மாநாட்டில் இந்து சமய அறநிலையத்துறை வசம் இருக்கும் கோவில்கள் அனைத்தையும் விடுவிப்போம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு “விடுவித்து, அந்தந்த கோவில்களை பாஜக மாவட்ட செயலாளர்களுக்கு எழுதிக் கொடுக்கவிட வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பினார்.
அடிப்படையையே தகர்க்கிற விஷயம் இது இந்து சமய அறநிலையத்துறை என்பது எப்படி உருவாக்கப்பட்டது? எப்படி இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் திருக்கோவில்கள் வந்தது என்பதை வரலாற்றுப் பத்தகங்களாக அச்சிட்டு வழங்கப்பட இருக்கிறது. பரம்பரை தக்கார்கள், திருக்கோவில்களை கம்பெனிகளாக நடத்தி வந்தார்கள். அதில் வரும் வருமானத்தை கொள்ளை அடிப்பதை தடுப்பதற்காகத்தான் கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறையில் கொண்டு வரப்பட்டது. சட்டப் போராட்டங்களின் வழியாக உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் 1968 ஆம் ஆண்டில் இந்து சமய அறநிலையத்துறை கொடைகள் சட்டம் உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டம் இந்து சமய அறக்கட்டளைகள் மற்றும் கோயில்களின் சொத்துக்களை நிர்வகிப்பது மற்றும் அவற்றின் நலன்களைப் பாதுகாப்பது தொடர்பாக விதிகளைக் கொண்டுள்ளது.
இந்தத் துறை, கோயில்களின் நிர்வாகம், சொத்துக்கள், நிதி மற்றும் பிற செயல்பாடுகளைக் கண்காணிக்கிறது. 1959 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்து சமய மற்றும் அறநிலையச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களின் ஒரு பகுதியாக இந்தச் சட்டம் வந்தது. கோவில்கள் கூடாது என்பநல்ல அது கொள்னளயர்களின் கூடாரமாக மாறிவிடக்கூடாது என்பது கலைஞர் சொன்ன ஆணித்தரமான கருத்தாகும். அவர்கள் கோவில்களை கொள்ளையர்களின் கூடாரமாக மாற்ற நினைக்கின்றனர். நாங்கள் திருக்கோவில்களை ஆன்மீகவாங்களின் கோவிலாக மாற்ற நினைக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார். மேலும் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன ஈம்பந்தம்? சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் பவன் கல்யாண் போட்டியிட்டு வெல்லட்டும். அதன் பிறகு பேசட்டும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
The post பாஜகவினருக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டது அதிமுக: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.