போடி: ஒன்றிய பாஜ அரசு கொண்டு வரும் சட்டங்கள் யாரையும் பாதிக்காது என டிடிவி தினகரன் கூறியுள்ளார். தேனி மாவட்டம் போடியில் அமமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நடந்த செய்தியாளர்களின் சந்திப்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது: கச்சத்தீவை விரைவில் ஒன்றிய அரசு மீட்கும். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தான 370 சட்டப்பிரிவை பாஜ அரசு நீக்கிய போதும், இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால் அதன் பின் காஷ்மீரில் அமைதி நிலவியது. ஜனநாயக முறைப்படி அங்கு தேர்தல் நடத்தப்பட்டு காங்கிரஸின் கூட்டணி கட்சியான தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி அமைத்துள்ளது.
என்னைப் பொறுத்தவரை பாஜ அரசு கொண்டு வரக்கூடிய திட்டங்கள் எல்லாம் நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான தொலைநோக்கு பார்வையுடன் தான் இருக்கிறது. பாஜ அரசு கொண்டு வரும் சட்டங்கள் எல்லாம் மக்களுக்கு பொதுவானது, யாரையும் பாதிக்காது. பாஜக கூட்டணியில் அதிமுக இணைந்தால் அண்ணாமலை பாஜ தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவார் அல்லது அதிமுக பொதுச்செயலாளராக செங்கோட்டையன் வருவார் போன்றவைகள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. எந்த ஒரு அறிவிப்பும் முறையாக வெளியாகும் முன் எந்தவித கருத்துகளும் கூற முடியாது. முழுமையாக அறிவிப்பு வந்த பிறகு கருத்து தெரிவிக்கிறேன். ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்தது குறித்து அவர் தான் பதிலளிக்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.
The post பாஜக அரசு சட்டங்கள் யாரையும் பாதிக்காது: சொல்கிறார் டிடிவி.தினகரன் appeared first on Dinakaran.