சோளிங்கர்: பாஜ கைவிரிப்பால் விரக்தியில் உள்ள டிடிவி.தினகரன், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான சோளிங்கர் தொகுதி அமமுக வேட்பாளரை அறிவித்து உள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையத்தில் மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அமமுக சார்பில் நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு பேசுகையில், ‘தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைகளை பாதுகாக்க உருவாக்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கொள்கையை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது. பேரூர் சிற்றூர் என கடைக்கோடி கிராமங்களில் கூட கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே நான் தனி ஆள் அல்ல. எனக்கு பின்னால் லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர். எதிரணியை வீழ்த்துவதற்கு ஒருமித்த கொள்கை கொண்ட அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் அமமுக வேட்பாளராக களம் காண உள்ள மாவட்ட செயலாளர் பார்த்திபனை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்’ என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டனியில் அமமுக உள்ள நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு கூட்டணி கட்சியினருடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை என எதுவும் இல்லாமலேயே தன்னிச்சையாக சோளிங்கர் தொகுதியில் வேட்பாளரை டிடிவி.தினகரன் அறிவித்து உள்ளார். சமீபத்தில் அதிமுக-பாஜ கூட்டணி உறுதியானது. ஆனால் இந்த கூட்டணி டிடிவி.தினகரன், சசிகலா, ஓபிஎஸ்சை சேர்க்க கூடாது என எடப்பாடி நிபந்தனை விதித்தார். இதனால் அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்ய அமித்ஷாவும் டிடிவி.தினகரன், சசிகலா, ஓபிஎஸ்சை கை கழுவினார். இதனால், கூட்டணியில் இடம் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற விரக்தியில் உள்ள டிடிவி.தினகரன் அமமுக வேட்பாளரை அறிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post பாஜ கைவிரிப்பால் டிடிவி.தினகரன் விரக்தி சோளிங்கர் தொகுதிக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு: கூட்டணியில் இருந்து கல்தாவா? appeared first on Dinakaran.