தூத்துக்குடி: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜ மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் தேசியத் தலைவர்களை மரியாதை நிமித்தமாக டெல்லியில் சந்தித்தேன். அப்போது கட்சி மற்றும் பூத் கமிட்டியை பலப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். தமிழகத்தில் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.
தமிழ்நாட்டில் தவெக உள்பட அனைத்து கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற ஓரணியில் திரள வேண்டும் என்பதே எங்களின் விருப்பமாகும். பாகிஸ்தானில் உள்ளவர்கள் கூட, தங்களுக்கு பாகிஸ்தான் வேண்டாம் என்றும், மோடி வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர். ஆனால், பஹல்காம் விவகாரத்தில், இந்தியாவில் இருந்து கொண்டு நம் நாட்டுக்கு எதிராக பேசி வரும் அரசியல்வாதிகளை தேச விரோதிகள் என்று தான் சொல்லவேண்டும்.
காலனி என்ற வாக்கியத்தை தமிழ்நாடு அரசு நீக்கியுள்ளது நல்ல விஷயம்தான். அதேபோன்று, இன்னும் நல்ல விஷயங்களை செய்ய வேண்டும். குறிப்பாக, தமிழகம் முழுவதும் டிஆர்பி தேர்வு எழுதிவிட்டு சுமார் 50 ஆயிரம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். திமுக தேர்தல் அறிக்கையில் இடைநிலை ஆசிரியர் நியமனம் செய்யப்படும் என அறிவித்திருந்தனர். அதனை விரைவில் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post பாஜ கூட்டணிக்கு தவெக வந்தால் நல்லது: – நயினார் ஆசை appeared first on Dinakaran.