சென்னை: பாஜவின் சதித்திட்டங்களுக்கு முதன்மை தடையாக இருப்பது தமிழ்நாடும் – திமுகவும்தான். பாஜ என்ன திட்டம் போட்டாலும் அதை முறியடிப்பதற்கான வலிமை நம்மிடம் உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வெற்றிக்காக பாடுபட்ட திமுக நிர்வாகிகளுக்கான பாராட்டு விழா நேற்று நடந்தது. இதில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பங்கேற்று, நிர்வாகிகளை வாழ்த்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:
தேர்தலை பொறுத்தவரை வரலாறு காணாத வெற்றியையும் நாம் பார்த்திருக்கிறோம். மிக மோசமான தோல்வியையும் சந்தித்திருக்கிறோம். பெற்ற வெற்றிகளால் நாம் தலைக்கனமும் கொண்டதில்லை; அடைந்த தோல்விகளால் சோர்வடைந்து முடங்கியதுமில்லை. ஒவ்வொரு முறையும் எழுச்சி பெற்று, முன்பை விட வீரியமாகக் கழகம் செயல்படுவதற்கு அடிப்படையாக இருப்பது உங்களை போன்ற உடன்பிறப்புகள்தான். அதனால்தான், நான் தலைவராகப் பொறுப்பேற்றதற்கு பிறகு சந்தித்த 2018 உள்ளாட்சித் தேர்தல் தொடங்கி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரையிலும் தொடர் வெற்றிகளை பெற்றிருக்கிறோம்.
தந்தை பெரியார் பிறந்த மண்ணில் மாபெரும் வெற்றியை தேடி தந்து, தமிழ் மண்ணில் பிற்போக்கு தனங்களையும் – வெறுப்பையும் பேசும் மக்கள் விரோத சக்திகளுக்கும் – அவர்களின் கைப்பாவைகளுக்கும் இடமில்லை என இந்த தேர்தலில் நிரூபித்திருக்கிறோம். இதற்காக பணியாற்றிய அமைச்சர்கள் முத்துசாமி, கே.என்.நேரு, எ.வ.வேலு, சக்கரபாணி, மு.பெ.சாமிநாதன், செந்தில் பாலாஜி, தா.மோ.அன்பரசன், சா.மு.நாசர், ராஜேந்திரன் ஆகியோருக்கும், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், ஈரோடு மத்திய மாவட்ட செயலாளர் தோப்பு வெங்கடாசலம், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி. வெங்கடாசலம் ஆகியோருக்கும், அவர்களுக்கு துணைநின்ற செந்தில், சுப்பிரமணி போன்ற நிர்வாகிகளுக்கும், பூத் கமிட்டி உறுப்பினர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் எனப் பாடுபட்டு உழைத்த அனைவருக்கும் நன்றியையும் பாராட்டையும் மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என்பது நாம் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளை நிறைவு செய்யப்போகும் நேரத்தில் வந்த தேர்தல். நம் ஆட்சி பற்றிய மக்களின் தீர்ப்பாக கருதப்பட்ட முக்கியமான தேர்தல். அதில் பெருவெற்றியை பெற்று தந்த உங்களிடம் நான் கேட்டுக்கொள்வது, இன்னும் ஓராண்டில் பொதுத் தேர்தலை சந்திக்கப் போகிறோம். பொதுத் தேர்தல் களத்தில் நம் எதிர்க்கட்சிகள் எல்லாம் நம்மிடம் இருந்து வெற்றியைப் பறிக்க எவ்வளவு வேண்டுமானாலும் தரம் தாழ்ந்து போவார்கள். ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.வின் சதி திட்டங்களுக்கு முதன்மை தடையாக இருக்கும் தமிழ்நாடும் – திராவிட முன்னேற்றக் கழகமும்தான். அதனால், பல்வேறு வடிவங்களில் எதிரிகளை உருவாக்குவார்கள்; நாடகங்கள் நடத்துவார்கள்.
இந்த மாதிரியான நாடகங்களை 75 ஆண்டுகளாக – ஏன், அதற்கு முன்பிருந்தே பார்த்துக்கொண்டு இருப்பவர்கள் நாம். அதனால், என்ன திட்டம் போட்டாலும் அதை முறியடிப்பதற்கான வலிமை நம்மிடம் உள்ளது. அந்த வலிமைதான் நீங்கள். உங்களை மாதிரி உழைக்கும் கோடிக்கணக்கான உடன்பிறப்புகள், நம் மேல் நம்பிக்கை வைத்து வாக்களிக்கும் தமிழ்நாட்டு மக்கள், என்னை பொறுத்தவரைக்கும், நான் கொள்கை – உழைப்பு – சாதனை ஆகியவற்றை நம்புகிறவன். அதற்கு நேர்மையாகவும் – தடம் மாறாமலும் இருப்பதால்தான் மக்கள் நம்முடன் இருக்கிறார்கள். அந்த மக்களைக் காக்க – இந்த தமிழ்நாட்டை தொடர்ந்து முன்னேற்ற – 2026ல் களம் காண்போம். உங்கள் உழைப்பைக் கொடுங்கள், வரலாறு காணாத வெற்றியைக் காண்போம். இவ்வாறு அவர் பேசினார்.
The post பாஜ என்ன சதித்திட்டம் போட்டாலும் முறியடிக்கும் வலிமை நம்மிடம் உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.