மெல்போர்ன்,
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்கியதால் இந்த டெஸ்ட் 'பாக்சிங் டே' என்ற பாரம்பரிய பெயரில் அழைக்கப்பட்டது.
இதில் இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்னடைவை சந்தித்துள்ளது.
அதன்படி நடைபெற்ற இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 474 ரன்களும், இந்தியா 369 ரன்களும் அடித்தன. இதனையடுத்து 105 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 234 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதனால் இந்தியாவுக்கு 340 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி வெறும் 155 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இந்த போட்டியின் கடைசி நாளில் தோல்வியை தவிர்த்து டிராவை பதிவு செய்ய முடியாத அளவுக்கு கவுதம் கம்பீரின் பயிற்சி மோசமாக இருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி விமர்சித்துள்ளார். அதே போல ரிஷப் பண்ட், டிராவிஸ் ஹெட் போன்ற பகுதி நேர பவுலரிடம் அவுட்டாகி இந்தியாவின் தோல்விக்கு வித்திட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "கவுதம் கம்பீர் சாருக்கு சபாஷ். இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடது - வலது கை கலவையை வைத்து தோல்வியை பெற்றுக் கொடுத்தீர்கள். இங்கே நல்ல பார்மில் இருக்கும் நிதிஷ் ரெட்டியை அதே காரணத்தால் 6வது இடத்தில் விளையாட அனுப்பவில்லை. ஒருவேளை நிதிஷ் அவுட்டானாலும் நீங்கள் பயிற்சியாளராக அவரை 6வது இடத்தில் விளையாட வைத்து புதிதாக முயற்சித்திருக்க வேண்டும்.
குறிப்பிட்ட பவுலருக்கு எதிராக எப்படி விளையாட வேண்டும் என்பதை அறிவுறுத்தாத இந்தியாவின் பேட்டிங் பயிற்சியாளர் யார் என்பது எனக்குத் தெரியவில்லை. இது ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு தனித்தனியான பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டிய நேரமாகும்.
முந்தைய காலங்களில் (80, 90-ஸ் காலங்களில்) விளையாடிய வீரர்களுக்கும் இப்போதுள்ள வீரர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அப்போதுள்ள வீரர்கள் இவர் நம்முடைய விக்கெட்டை எடுக்கத்தான் வருகிறார் என்று விரைவாக புரிந்து விளையாடுவார்கள். அப்போதுள்ள வீரர்கள் ஹெட் போன்ற பவுலரிடம் விக்கெட்டை கொடுக்க மாட்டார்கள்.
ஒருவேளை அதிரடியாக விளையாட முயற்சித்தாலும் அது தரையோடு தரையாக இருக்கும். ஆனால் அதை செய்யாத ரிஷப் பண்ட் சிக்சர் அடிக்க முயற்சித்து முட்டாள் போன்ற வேலையை செய்தார். அவரால் யார் பாதிக்கப்பட்டுள்ளார்கள்? இந்திய அணி மற்றும் இந்திய நாடு. அந்த விக்கெட்தான் மொத்த போட்டியையும் மாற்றியது. கடவுள் உங்களுக்கு மூளையை கொடுத்து இருக்கிறார். அதை நீங்கள் பயன்படுத்த வேண்டும்" என்று கூறினார்.