மெல்போர்ன்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடிலெய்டில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. பிரிஸ்பேனில் நடந்த 3-வது டெஸ்ட் மழையின் பாதிப்பால் 'டிரா' ஆனது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இறுதியில் நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில 86 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்திருந்தது.
ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டீவ் சுமித் 68 ரன்களுடனும், கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். இன்று 2ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா தொடர்ந்து பேட்டிங் செய்து வருகிறது.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மித் சதம் அடித்து அசத்தினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 34வது சதமாகும். இந்த சதத்தின் மூலம் அவர் இந்தியாவுக்கு எதிராக மிகப்பெரிய சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளார்.
அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் ஜோ ரூட்டை (10 சதம்) பின்னுக்கு தள்ளி ஸ்டீவ் ஸ்மித் (11 சதம்) முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியல்:-
ஸ்டீவ் ஸ்மித் - 11 சதம்
ஜோ ரூட் - 10 சதம்
கேரி சோபர்ஸ், விவியன் ரிச்சர்ட்ஸ், ரிக்கி பாண்டிங் - 8 சதம்