பாகூர், ஜன. 10: பாகூர் அருகே மதுக்கடையில் ஏற்பட்ட மோதலில் கடலூர் தொழிலாளியை கொலை வெறியுடன் தாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த வெல்லப்பாக்கம் லட்சுமி நகரை சேர்ந்தவர் முத்து (32), சென்ட்ரிங் தொழிலாளி. இவர், தனது நண்பர்களுடன் புதுச்சேரி பாகூர் அடுத்த குருவிநத்தம் சித்தேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் மதுக்கடைக்கு மது குடிக்க சென்றுள்ளார். அங்கு மது குடித்து கொண்டிருந்தபோது, அவர்களுக்கும், எதிரே டேபிளில் மது குடித்து கொண்டிருந்த ஒரு கும்பலுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதனால் மது குடித்து கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து பயந்து ஓடினர். முத்துவுடன் வந்திருந்த நண்பர்களும் அங்கிருந்து தப்பித்து ஓடியதாக தெரிகிறது. ஆனால் முத்து மட்டும், எதிர் கோஷ்டியிடம் வசமாக சிக்கிக்கொண்டதாக தெரிகிறது. ஆத்திரமடைந்த அவர்கள், முத்துவை கல் மற்றும் பீர்பாட்டிலால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச் சென்றனர்.
இதில் தலை, முகம் உள்ளிட்ட பகுதியில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த முத்துவை அங்கிருந்தவர்கள் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முத்து மனைவி விகிதா (23), பாகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், கொலை முயற்சி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில் முத்துவை கொடூரமாக தாக்கியது தொடர்பாக, பாகூர் அடுத்த தமிழக பகுதியான இரண்டாயிரவிளாகத்தை சேர்ந்த ஆனந்தராஜ் (24), குருவிநத்தம் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் (34), ரஞ்சித் (26) என தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
The post பாகூர் அருகே மதுக்கடையில் மோதல் கடலூர் தொழிலாளியை கொலை வெறியுடன் தாக்கிய 3 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.