பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டத்தை தொடர வேண்டும், எந்த விலை கொடுத்தாலும் சமத்துவ சமூகத்தை உருவாக்குவோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

1 month ago 5

திருவனந்தபுரம் : வைக்கம் பெரியார் நினைவகத்தை சிறப்பாக அமைத்துள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். முன்னதாக வைக்கம் போராட்ட 100ம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். தொடர்ந்து, மைசூருவை சேர்ந்த எழுத்தாளர் தேவனூரு மகாதேவவுக்கு வைக்கம் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதையடுத்து விழாவில் சிறப்புரை ஆற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பெரியாரின் வைக்கம் போராட்டம் பற்றி மலையாளத்தில் விளக்கம் பேசினார்.

மேலும் பேசிய அவர், “பெரியாருக்கு எதிராக யாகம் நடத்திய மண்ணில் பெரியார் கொண்டாடப்படுவதுதான் அவரது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி. வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததை வரலாற்று பெருமையாக கருதுகிறேன். இந்திய அளவில் ஆளுமை மிக்க தலைவர்களில் ஒருவராய் விளங்குகிறார் பினராயி விஜயன். பெரியார் நூற்றாண்டு தொடக்க விழாவை ஏற்பாடு செய்து எங்களை அழைத்தார். பெரியார் நூற்றாண்டு நிறைவு விழாவை தமிழ்நாடு ஏற்பாடு செய்து, பினராயியை அழைத்துள்ளோம். வைக்கம் போராட்டம் எப்படி கம்பீரமானதோ அதைப்போலவே பெரியார் நினைவகமும் கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது. வைக்கம் பெரியார் நினைவகத்தை சிறப்பாக அமைத்துள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள்.

பெரியார் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெறும் இந்நாள், வரலாற்றில் பொன்நாள். கேரளாவுக்கு வரும் அனைவரும் வைக்கம் பெரியார் நினைவகத்தை பார்த்து ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட வரலாறை அறிய வேண்டும். ஒருவர் புறப்பட்டு ஓயாது உழைத்து ஒரு பெரிய சமூகத்தை மாற்றிய வரலாறு தமிழ்நாட்டை தவிர வேறு எங்கும் இல்லை. கேரள காங்கிரஸ் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று 5 மாத காலம் வைக்கத்தில் தங்கி போராட்டம் நடத்தினார் பெரியார். கேரளாவில் 75 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார் பெரியார். பெரியாருக்கு எதிரான தடை உத்தரவை திருவிதாங்கூர் சமஸ்தான அரசு வாபஸ் பெற்றதை அறிந்து மக்கள் மகிழ்வர் என எழுதினார் காந்தி. 1925-ல் வைக்கம் போராட்ட வெற்றிவிழாவில் பங்கேற்க பெரியார், நாகம்மைக்கு அழைப்பு வந்தது.

வைக்கம் போராட்டத்தில் வென்ற பெரியாருக்கு வைக்கம் வீரர் என பட்டம் சூட்டினார் தமிழ்த்தென்றல் திருவிக.பெரியாரின் வைக்கம் போராட்டம் மிகவும் முக்கியமானது என அம்பேத்கர் குறிப்பிட்டார். வைக்கம் போராட்டத்தை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பல கோயில் நுழைவு போராட்டங்கள் நடந்ததற்கு பெரியாரே காரணம். பெரியாரின் போராட்டம் காரணமாகவே கோயிலுக்குள் நுழையும் அனைவரையும் பாதுகாக்க 1939-ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. வைக்கம் போராட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து பங்கேற்றவர்களின் பட்டியல் நீளமானது. 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது சமூகரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முன்னேறி இருக்கிறோம். ஆனால் இன்னும் நாம் வெகுதூரம் முன்னேறி செல்ல வேண்டி இருக்கிறது. பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டத்தை நாம் தொடர வேண்டும். யாரையும் தாழ்த்திப்பார்க்காத சமத்துவ சிந்தனை மக்கள் மனதில் மலர வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் என்பதை சமத்துவ கொள்கையாக மட்டுமல்லாமல் ஆட்சியின் கொள்கையாகவே தமிழ்நாட்டில் அறிவித்துள்ளோம். வைக்கம் போராட்ட விழாவை கொண்டாடுவது பெரியாரை போற்ற மட்டுமல்ல; அவர்கள் காட்டிய வழியில் பயணிப்பதற்காகவும்தான். எந்த விலை கொடுத்தாலும் சமத்துவ சமூகத்தை உருவாக்குவோம்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டத்தை தொடர வேண்டும், எந்த விலை கொடுத்தாலும் சமத்துவ சமூகத்தை உருவாக்குவோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Read Entire Article