இஸ்லாமாபாத் ,
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஜொலிக்காததைத் தொடர்ந்து பாபர் அசாம் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.இதனால் ஷாஹீன் அப்ரிடி டி20, ஒருநாள் பாகிஸ்தான் அணி கேப்டனாக நியமிக்கப்பட்டார்.ஷான் மசூத் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் , டி20 உலகக்கோப்பையை முன்னிட்டு மீண்டும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமனம் செய்யப்பட்டார். சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதனால் பாபர் அசாம் கேப்டன்ஷிப் மீது மீண்டும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் டி20, ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக பாபர் அசாம் மீண்டும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நான் விலகுகிறேன். இது தொடர்பாக எனது முடிவை கடந்த மாதமே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் சொல்லி விட்டேன் . கேப்டன் பதவியில் இருந்து விலகி பேட்ஸ்மேனாக எனது பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். கேப்டன் பதவி எனக்கு பலன் அளிக்கும் அனுபவமாக இருந்தது. ஆனால் குறிப்பிடத்தக்க பணிச்சுமையை அது எனக்கு ஏற்படுத்தியது. என தெரிவித்துள்ளார் .