
பனாஜி,
கோவாவில் அரபிக்கடலில் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று பார்வையிட்டார். மேலும், கடற்படை அதிகாரிகளுடனும் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.
அதன்பின் ராஜ்நாத் சிங் கூறியதாவது, அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள கடற்படை தயாராக இருக்க வேண்டும். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பயிற்சி மட்டும்தான். இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மீண்டும் நடவடிக்கை எடுக்க முயன்றால் இந்தமுறை கடற்படையும் களத்தில் இறங்கி நடவடிக்கை எடுக்கும். கடற்படையும் களத்தில் இறங்கினால் பாகிஸ்தானுக்கு என்ன ஆகும் என்பது கடவுளுக்கு மட்டும்தான் தெரியும்.
1971ம் ஆண்டு கடற்படை களத்தில் இறங்கியபோது பாகிஸ்தான் இரண்டு துண்டுகளாக உடைந்தது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய கடற்படை முழு பலத்துடன் களமிறங்கி இருந்தால் பாகிஸ்தான் 4 துண்டுகளாக உடைந்திருக்கும்' என்றார்.