
புதுடெல்லி,
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதல் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது.
இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில், எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. இந்த தாக்குதல் முயற்சிகளை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வந்தது. இந்த நிலையில், தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.
முன்னதாக இந்தியாவுடனான மோதலின்போது துருக்கி, அஜர்பைஜான் நாடுகள் நேரடியாக பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தன. இதனைத்தொடர்ந்து இருநாடுகள் மீதும் மக்கள் அதிருப்தியாகி இருந்தனர்.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததால் துருக்கி, அஜர்பைஜான் நாடுகளுக்குச் சுற்றுலா செல்வதற்கான முன்பதிவை இந்தியர்கள் ரத்து செய்துவருகின்றனர்.
இதன்படி சுற்றுலா தலங்களுக்காக பயணத்தை முன்பதிவு செய்யும் இணையதள செயலியில் (மேக்மை டிரிப்) துருக்கி, அஜர்பைஜானுக்கான முன்பதிவு 60 சதவீதம் சரிந்துள்ளது. அதோடு மட்டுமின்றி கடந்த ஒருவாரத்தில் மட்டும் ஏற்கெனவே செய்யப்பட்ட முன்பதிவுகள் 250 சதவீதம் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிறுவனம் மார்ச் மாத வருவாய் குறித்த அறிவிப்பின்போது இந்திய சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் முன்பதிவுகளை ரத்து செய்வவதை சுட்டிக்காட்டி உள்ளது. இதன் எதிரொலியாக இந்த இரு நாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்கான விளம்பரங்கள் மற்றும் தள்ளுபடிகளை நிறுத்திவைப்பதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.