இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல் பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சிக்கு பிறகு அங்குள்ள பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்குள் ஊடுருவி அடிக்கடி தாக்குதலை நடத்துகின்றனர். எனவே கைபர் பக்துங்க்வா, பலுசிஸ்தான் ஆகிய எல்லையோர மாகாணங்களில் ராணுவம் கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளது.
இந்தநிலையில், ஆப்கானிஸ்தான் பகுதியை ஒட்டியுள்ள கைபர் பக்துங்க்வா மாகாணத்தின் குர்ரம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் வாகனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி உள்ளனர். கைபர் பக்துங்க்வான் தலைநகரான பராச்சினாரிலிருந்து பெஷாவர் நோக்கி சென்ற பயணிகள் வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் 8 பெண்கள் மற்றும் 5 குழந்தைகள் உட்பட 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாகனங்கள் சென்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 40 வாகனங்கள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று கொண்டிருந்த நிலையில், இரண்டு வாகனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.