
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து நேற்று அங்கு இடி-மின்னலுடன் கனமழை பெய்து வெளுத்து வாங்கியது. மேலும் பலத்த சூறவாளி காற்றுடன் பெய்த கனமழை காரணமாக மாகாணத்தில் அமைந்துள்ள நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் அங்குள்ள லாகூர், ஷேகுபுரா, நங்கனா சாஹிப், அட்டாக், முல்தான், ராஜன்பூர், ஹபிசாபாத், மியான்வாலி, ஜாங் குஜ்ரன்வாலா, லாயா உள்ளிட்ட நகரங்களில் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.இதனால் வாகனங்கள் சாலைகளில் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. சூரைக்காற்று காரணமாக வீட்டின் மேற்கூரைகள், மின்சார கம்பங்கள், மரங்கள் ஆகியவை வேரோடு சாய்ந்து தூக்கி வீசப்பட்டன. இதனால் அங்கு மின்சார வினியோகம் தடைபட்டது. மேலும் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கின.
பாகிஸ்தானில் நேற்று கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, ராட்சர விளம்பர பலகைகள் விழுந்தது உள்ளிட்டவற்றால் பெண்கள், சிறுமிகள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தநிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.