
புதுடெல்லி,
காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தியா மட்டுமின்றி, சர்வதேச அளவில் இந்த தாக்குதல் சம்பவம் பெரும் அதிரவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், "அட்டாரி-வாகா எல்லை மூடப்படுகிறது. சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது" என்பன உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதோடு, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே 1-ந்தேதிக்குள் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. பாகிஸ்தான் நாட்டவர்கள் இந்தியாவிற்குள் நுழைய அனுமதி இல்லை என்றும், தற்போது இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவை நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தியா வந்தவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும், பாகிஸ்தானியர்களுக்கான மருத்துவ விசா ஏப்ரல் 29-ந்தேதி வரைதான் செல்லும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியர்கள் பாகிஸ்தான் நாட்டுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், பாகிஸ்தானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக இந்தியா வந்து சேருமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்கள் 27-ந்தேதிக்குப் பின் செல்லாது என்றும், பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்கள் உடனடியாக ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.