
கொல்கத்தா,
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வங்காள மொழி பேசும் மக்களை துன்புறுத்துகின்றனர் என பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில், ஒடிசாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் கைது, டெல்லியில் வங்காள மக்கள் வெளியேற்றம், கூச் பெஹாரை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு அசாமில் நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரம் போன்றவை பரபரப்பை ஏற்படுத்தின.
இதனை கண்டித்தும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரத்தின் தெருக்களில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் இன்று பேரணி நடந்தது. சட்டத்திற்கு புறம்பான கைது நடவடிக்கைகளுடன், அவர்களை சட்டவிரோத குடியேறிகளாக முத்திரை குத்த முயற்சிகள் நடக்கின்றன என அக்கட்சி குற்றச்சாட்டாக கூறியுள்ளது.
இதில், அக்கட்சியின் தேசிய பொது செயலாளர் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இதன்படி, மத்திய கொல்கத்தாவின் கல்லூரி சதுக்கம் பகுதியில் இன்று மதியம் பேரணி தொடங்கியது. தர்மதலாவில் உள்ள தோரினா கிராசிங் பகுதியில் பேரணி நிறைவடைகிறது.
இதனால், பாதுகாப்பிற்காக 1,500 போலீசார் குவிக்கப்பட்டனர். 3 கி.மீ. தொலைவுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. வாகன போக்குவரத்தும் பல்வேறு முக்கிய சாலைகளில் திருப்பி விடப்பட்டது. இதேபோன்று மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்ட தலைநகரங்களிலும், ஆளுங்கட்சியின் பேரணி நடந்தது.
அடுத்த ஆண்டு மத்தியில் மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், அதற்கு வலு சேர்க்கும் வகையில் இந்த பேரணி அமையும் என பார்க்கப்படுகிறது.