3 தீமைகள்... ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேச்சு

7 hours ago 4

தியான்ஜின்,

சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளிவிவகார மந்திரிகளுக்கான கவுன்சில் கூட்டம் கடந்த 14-ந்தேதி தொடங்கியது. இதில், அந்த அமைப்பிலுள்ள சீனா, ரஷ்யா, இந்தியா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் பெலாரஸ் ஆகிய 10 உறுப்பு நாடுகளை சேர்ந்த மந்திரிகள் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் மத்திய வெளிவிவகார மந்திரி எஸ். ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இதில், சீன வெளியுறவு மந்திரி வாங் யி, அந்தந்த உறுப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மற்றும் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். இதில், பல்வேறு துறைகள் மற்றும் சர்வதேச, மண்டல விவகாரங்களில் ஒத்துழைப்புக்கான பார்வைகளை தலைவர்கள் பரிமாறி கொள்வர் என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது.

இதற்காக, சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர், அதனை முடித்து கொண்டு சீனாவுக்கு புறப்பட்டார். இதன்படி சீனாவுக்கு கடந்த 14-ந்தேதி சென்றார்.

5 ஆண்டுகளில் அவர் மேற்கொள்ளும் முதல் சீன பயணம் இதுவாகும். இந்த பயணத்தில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொது செயலாளர் நூர்லன் எர்மெக்பயேவை பீஜிங்கில் சந்தித்து பேசினார். இதேபோன்று சீன துணை ஜனாதிபதி ஹான் ஜெங்கையும் பீஜிங்கில் சந்தித்து பேசினார். இருதரப்பு உறவுகளில் ஏற்பட்ட முன்னேற்றம் பற்றியும் அவருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில், தியான்ஜினில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளிவிவகார மந்திரிகளுக்கான கவுன்சில் கூட்டத்தில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகிய 3 தீமைகளே எதிர்கொள்ள வேண்டிய விசயங்கள் என ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கண்டறிந்து உள்ளது.

அவை ஒன்றிணைந்து நிகழ்கின்றன என்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. சமீபத்தில், பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலை இந்தியா சந்தித்தது. காஷ்மீரில், சுற்றுலா வர்த்தகம் சீர்குலைவதற்கான தெளிவான நோக்கத்தில் அது நடத்தப்பட்டது. அதில் மத பிரிவினையும் விதைக்கப்பட்டது.

நம்மில் சிலர் உறுப்பினர்களாக உள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆனது, இதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது என பேசினார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பானது, அது உருவாக்கப்பட்டதற்கான நோக்கங்களுடன் தொடர்ந்து இருக்க வேண்டியது அவசியம். இந்த சவாலில் வளைந்து கொடுக்காத ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று அவர் பேசியுள்ளார்.

Read Entire Article