
சென்னை,
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே கூட்டணி மலரும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றார்போல் நடைபெறும் நிகழ்வுகளும் அமைந்துள்ளன.
கடந்த மாதம் (மார்ச்) 25-ந்தேதி சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். அவருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலரும் சென்றனர்.
அங்கு அவர்கள் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினர். நீண்ட நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், மத்திய மந்திரி அமித்ஷா தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இதனால் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணி ஏற்படும் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், மக்கள் பிரச்சினைக்காகவே மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்தேன் என்றார்.
இதனிடையே அ.தி.மு.க.வின் மூத்த தலைவரான செங்கோட்டையனும் டெல்லி சென்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியது அரசியலில் பரபரப்பை அதிகரித்தது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி அமைந்துள்ளது. ஒரு சில மாநிலங்களில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது. தமிழகம், கேரளம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜனதாவுக்கு குறிப்பிடத்தக்க வெற்றி இல்லை என்பதால், தமிழக அரசியல் மீது பா.ஜனதா மத்திய தலைமை கூடுதல் கவனத்தை செலுத்த தொடங்கி உள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையில் அமைந்த கூட்டணி குறிப்பிடத்தக்க ஓட்டுகளை பெற்றதால், இந்த முறை தமிழகத்தில் ஆட்சி என்பதை நனவாக்க வேண்டும் என்று பா.ஜனதா கட்சி திட்டமிட்டு அதற்கேற்ப வியூகம் வகுத்து வருகிறது. அதற்காக அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கவும் முடிவு செய்துள்ளது. டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய மந்திரி அமித்ஷா, தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது என்று கூறினார்.
மேலும் பீகார் மற்றும் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறினார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் மத்திய மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டது. இந்த பயணத்தின்போது பா.ஜனதா கூட்டணி கட்சி தலைவர்களையும், அ.தி.மு.க. தலைவர்களையும் அவர் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
அவரது வருகையையொட்டி பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்து பேசினார்.
இதனிடையே மத்திய மந்திரி அமித்ஷா நேற்று இரவு 11 மணிக்கு சென்னை வந்தார். விமான நிலையத்தில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், மாநில பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், தமிழக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பா.ஜனதா சட்டமன்றக்குழு தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர்கள் கரு.நாகராஜன், நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அங்கிருந்து மத்திய மந்திரி அமித்ஷா, கார் மூலம் கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். அங்கு இரவு அவர் தங்கினார்.
இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் அமித்ஷா பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளார். குறிப்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணி முடிவு செய்யப்படும் என்றும் தெரிகிறது. இரு தலைவர்களும், இந்த கூட்டணியை அறிவிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் இதுகுறித்து இப்போது வரை எந்த அதிகாரபூர்வ தகவல்களும் வெளியிடப்படவில்லை.
அதேபோல அமித்ஷா, தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜய்காந்த், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலரை சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து அமித்ஷா 12 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். தொடர்ந்து அமித்ஷா மாலை 4.40 மணிக்கு மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்திற்கு செல்கிறார். அங்கு சுமார் ஒரு மணி நேரம் இருக்கும் அமித்ஷா, மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு 6 மணிக்கு விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து டெல்லி புறப்படுகிறார்.
மத்திய மந்திரி அமித்ஷாவின் இந்த ஒரு நாள் பயணம் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியை இறுதி செய்துவிடுமா? என்பது இன்று தெரிந்து விடும்.