பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவம் நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடத்த அழுத்தம்?ஒன்றிய அரசு ஆலோசனை

2 weeks ago 6

புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தும் நிலையில், அதுகுறித்து ஒன்றிய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தில் 26 சுற்றுலா பயணிகள் பலியான நிலையில், இந்த சம்பவத்திற்கு உலக தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே ஒன்றிய அரசின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு, பஹல்காம் சம்பவம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து பிரபல வழக்கறிஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் கூறுகையில், ‘பஹல்காம் சம்பவத்தை கண்டித்து அனைத்து கட்சிகளின் சார்பில் கண்டன தீர்மானத்தை நிறைவேற்ற வசதியாக சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தைக் கூட்ட வேண்டும். இதன் மூலம் உலக ஒற்றுமைக்கான செய்தியை அனுப்ப முடியும். பாகிஸ்தான் மீது ராஜதந்திர அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்களின் பிரதிநிதிகளை பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி ஆதரவு தேட வேண்டும்.

பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும். பாகிஸ்தானுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளுக்கும் நமது வர்த்தக சந்தையில் நுழைய முடியாது என்ற செய்தியை அனுப்ப வேண்டும். பஹல்காம் தாக்குதல் சம்பவமானது இந்தியாவின் இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பதால், முழு நாடும் ஒன்றிய அரசுடன் உள்ளது. இந்த நேரத்தில், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்டுமாறு பிரதமருக்கு பரிந்துரைக்க விரும்புகிறேன்.

இதுபோன்ற செயல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. மக்களின் உணர்வுகளை உலகிற்கு வெளிப்படுத்த வேண்டி, நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்’ என்று கூறினார். கபில் சிபலின் கருத்து குறித்து பாஜக மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘கபில் சிபலின் கோரிக்கை குறித்து ஒன்றிய அரசு பரிசீலிக்கும். பிரதமர் மோடி ஒற்றுமையுடன் தேசத்திற்காகப் பணியாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.

குறிப்பாக தேசிய பாதுகாப்பு தொடர்பான நெருக்கடி நேரத்தில் அனைத்து தரப்பினரிடமும் கருத்துகள் கோரப்படும். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கான தேதி விரைவில் முடிவு செய்யப்படும். அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளது. சீனாவுடனான போர் குறித்து விவாதிக்க கடந்த 1962ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.

ஒன்றிய அரசு ஏற்கனவே தீவிரவாதத்திற்கு எதிரான போரை அறிவித்துள்ளது; எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசுக்கு ஆதரவை தெரிவித்துள்ளன. இப்போது சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அது பாகிஸ்தானுக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் பெரும் அடியாக இருக்கும். ஜனாதிபதி திரவுபதி முர்மு ரோமில் இருந்து இந்தியா திரும்பிய பிறகு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் குறித்து முடிவு எடுக்கப்படும்’ என்று அவர்கள் கூறினர்.

The post பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவம் நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடத்த அழுத்தம்?ஒன்றிய அரசு ஆலோசனை appeared first on Dinakaran.

Read Entire Article