பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்தியா; ஏப். 22 மதியம் 2.30 மணிமுதல் இன்று அதிகாலை 1.44 மணி வரை நடந்தது என்ன?: ‘நீதி’ நிலைநாட்டப்பட்டதாக இந்திய ராணுவம் அறிவிப்பு

1 week ago 3

புதுடெல்லி: கடந்த ஏப். 22ல் நடந்த பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இன்று அதிகாலை பாகிஸ்தானுக்கு உரிய பதிலடியை இந்திய ராணுவம் கொடுத்துள்ளது. இதன் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. மேலும் இதுவரை நடந்த சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு – காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர், மாநிலத்தில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தவும், அப்பகுதியில் அமைதியை மீட்டெடுக்கவும் ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேநேரம் ஜம்மு – காஷ்மீரின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகள், எல்லை தாண்டி ஊடுருவி ஜம்மு – காஷ்மீரில் அவ்வப்போது படுகொலைகளை அரங்கேற்றி வருகின்றன.

வளர்ச்சியை நோக்கி ஜம்மு – காஷ்மீர் முன்னேறிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், பாகிஸ்தானின் தூண்டுதலால் நடக்கும் தீவிரவாத செயல்கள் பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் ‘மினி சுவிட்சர்லாந்து’ என்று அழைக்கப்படும் இயற்கை எழில் கொஞ்சும் ஜம்மு – காஷ்மீரின் பைசரன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள பஹல்காம் பகுதியை கடந்த ஏப். 22ம் தேதி பிற்பகல் 2.50 மணியளவில் சுற்றுலா பயணிகள் ஜாலியாக சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ராணுவ வீரர்களின் உடையில் கையில் எம்4 மற்றும் ஏகே-47 ரக துப்பாக்கிகளுடன் சுற்றுலா பயணிகளை நெருங்கிய நான்கு முதல் ஆறு தீவிரவாதிகள், சுற்றுலா பயணிகளின் பெயரை கேட்டறிந்தும் அவர்களின் மதத்தை கேட்டறிந்தும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு நேபாள நாட்டு பிரஜை மற்றும் 25 இந்திய சுற்றுலா பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

நாட்டையே உலுக்கிய இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்தன. இந்திய உளவுத்துறைகள் (ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங் – ‘ரா’ மற்றும் இன்டலிஜென்ஸ் பீரோ – ஐபி) இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புகள் தான் காரணம் என்று குற்றம் சாட்டின. இந்த தாக்குதலை லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவற்றின் துணை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (டிஆர்எப்) நடத்தியதாக அறிவித்தது. பிரதமர் மோடி, இந்த தாக்குதலை ‘மனிதாபிமானமற்ற தாக்குதல்’ என்று கண்டனம் தெரிவித்ததுடன் தீவிரவாதிகளுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். கடந்த ஏப். 22ம் தேதி பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதல் தொடங்கி, இன்று அதிகாலை 1.44 மணிக்கு நடத்தப்பட்ட ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதிலடி தாக்குதல் வரை நடந்த சம்பவங்களையும், ஒன்றிய அரசின் முன்னேற்பாடுகளையும், அதன் தொடர்ச்சியாக நடந்த ராணுவ நடவடிக்கையையும் பார்ப்போம்.

ஏப்ரல் 22;
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப். 22ம் தேதி பிற்பகல் 2.50 மணியளவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சவுதி அரேபியாவிற்கு இரண்டு நாள் அரசு முறை பயணமாக சென்றிருந்த பிரதமர் மோடி, பஹல்காம் தாக்குதல் குறித்த தகவல் கிடைத்தவுடன் தனது பயணத்தை குறைத்துக் கொண்டு, ஏப். 23 அதிகாலை டெல்லி திரும்பினார். அதற்கு முன்னதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா, பஹல்காம் தாக்குதல் சம்பவம் நடந்தது குறித்து நிலைமையை ஆராய ஜம்மு – காஷ்மீர் விரைந்தார். ஜம்மு – காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, தீவிரவாதிகளை தீர்த்துக் கட்டுவதற்கான நடவடிக்கைகளை தொடங்க உத்தரவிட்டார்.

ஏப்ரல் 23;
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் டெல்லியில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். தேசிய புலனாய்வு முகமை, ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி, பஹல்காம் பகுதிக்கு நேரில் சென்று ஆதாரங்களை சேகரிக்கத் தொடங்கியது. தொடர்ந்து குப்வாரா, புல்வாமா, சோபூர், அனந்த்நாக், பாரமுல்லாவில் தீவிர சோதனைகளை மேற்கொண்டது. முதற்கட்ட விசாரணையில் 5 முதல் 7 தீவிரவாதிகள் பஹல்காம் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற இரண்டு உள்ளூர் தீவிரவாதிகள் அவர்களுக்கு உதவியதாகவும் தெரியவந்தது. தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பாகிஸ்தான் தீவிரவாதிகளின் வரைபடங்கள் வெளியிடப்பட்டது. மேலும், அவர்கள் குறித்த தகவல்களை அளிப்பவர்களுக்கு ₹20 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டது. பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் பாதுகாப்பு படைகள் தேடுதல் வேட்டைகளை தொடர்ந்து நடத்தினர்.

பஹல்காம் தாக்குதல் சம்பவம் குறித்து விவாதிக்க ஒன்றிய அரசு அனைத்து கட்சிக் கூட்டத்தை நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் சில தீவிரவாத அமைப்புகள் தான் காரணம் என்று ஒன்றிய அரசு கூறியது. பாகிஸ்தான் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஒன்றிய அரசுக்கு முழு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தெரிவித்தன. இருந்தும் உளவுத் துறை தோல்வி குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தின. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை போன்றவையும் கண்டனம் தெரிவித்தன. சர்வதேச அரங்கில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சிகளை இந்தியா தீவிரப்படுத்தியது.

ஏப்ரல் 24 முதல் 27 வரை;
பஹல்காம் தாக்குதலால் ஜம்மு காஷ்மீரின் சுற்றுலாத் துறை வெகுவாக பாதிக்கப்பட்டதால், ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் காஷ்மீரை விட்டு வெளியேறினர். கடந்த ஏப்ரல் 24ம் தேதி முதல், இந்தியாவில் வசிக்கும் 537 பாகிஸ்தானியர்கள் அட்டாரி எல்லை வழியாக வெளியேற்றப்பட்டனர். மேலும் 850 இந்தியர்கள் பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பினர். பாகிஸ்தானுடன் உறவுகளை துண்டிக்கும் வகையில், அந்நாட்டுனான அனைத்து ராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை இந்தியா துண்டித்தது. மேலும் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா இடை நிறுத்தியது. பஹல்காம் தாக்குதல் குறித்து நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடத்த எதிர்கட்சிகள் வலியுறுத்தின. ஒன்றிய அரசு இது குறித்து ஆலோசனை நடத்தியது.

ஏப்ரல் 28 முதல் மே 2 வரை;
கடந்த ஏப். 28ம் தேதி தேசிய புலனாய்வு முகமை முறைப்படி வழக்கு பதிவு செய்து, பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மற்றும் லஷ்கர்-இ-தொய்பா தொடர்பு இருப்பதை உறுதி செய்தது. பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஹாஷ்மி மூசா (சுலைமான்) மற்றும் அலி பாய் (தல்ஹா பாய்) தாக்குதலில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்டனர். பஹல்காம் தாக்குதலுக்கு முன், தீவிரவாதிகள் ஏப். 15ம் தேதி வாக்கில் பைசரன் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளை கண்காணித்து, உள்ளூர் ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் ஹுரியத் மாநாடு உறுப்பினர்களின் உதவியுடன் தாக்குதலை நடத்த திட்டமிட்டனர் என்று தகவல்கள் தெரிவித்தன. எல்லைக் கட்டுப்பாடு கோட்டில் பாகிஸ்தான் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது. ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகானுடன் ஆலோசனை நடத்தி, எல்லையில் பாதுகாப்பை தீவிரப்படுத்தினார். பிரதமர் மோடியும் அவ்வப்போது ராணுவம், உளவு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மே 3 முதல் 5 வரை;
கடந்த 3ம் தேதி சென்னையில் இருந்து கொழும்பு சென்ற விமானத்தில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடைய தீவிரவாதிகள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து கொழும்பு விமான நிலையத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. தேசிய பாதுகாப்பு மற்றும் பொது நலன் கருதி, பாகிஸ்தானில் இருந்து அனைத்து இறக்குமதிகளுக்கும் இந்தியா தடை விதித்தது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் அட்டாரி எல்லை முழுவதுமாக மூடப்பட்டது. பஹல்காம் தாக்குதலால், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றங்கள் அதிகரித்து வந்த நிலையில், கடந்த 5ம் தேதி ஒன்றிய அரசு வெளியிட்ட அவசர அறிவிப்பில் நாடு முழுவதும் இன்று (ஏப். 7) போர்க்கால ஒத்திகை நடத்த உத்தரவிட்டது. கடந்த 1971ம் ஆண்டு இந்திய – பாகிஸ்தான் இடையிலான போருக்கு பிறகு இன்று போர்க்கால ஒத்திகை நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. மேலும் ஒன்றிய உள்துறை அமைச்சகம், அனைத்து மாநிலங்களுக்கும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களை வழங்கியது.

மே 6 முதல் 7 வரை;
போர்க்கால ஒத்திகை தொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலாளர்கள், காவல் துறை உயரதிகாரிகளுடன் ஒன்றிய உள்துறை அமைச்சக செயலாளர் மற்றும் ராணுவ அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் முகாமிட்டிருக்கும் தீவிரவாத முகாம்கள் மற்றும் தீவிரவாதிகளை தீர்த்துக் கட்டும் நோக்கில் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் வியூகங்கள் நேற்றிரவு வகுக்கப்பட்டன. இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை அழித்தது. இதில் தீவிரவாதிகள் பலர் கொல்லபட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்திய பாதுகாப்பு அமைச்சகம், இந்த தாக்குதலை ‘பஹல்காம் தாக்குதலுக்கு கொடுக்கப்பட்ட துல்லியமான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பதிலடி’ என்று அறிவித்தது. இந்த தாக்குதலுக்கு எதிர்வினையாற்றிய பாகிஸ்தான், இரு நாடுகளுக்கு இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பொதுமக்கள் வாழும் பகுதிகளில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் பலர் காயமடைந்ததாகவும் கூறியது. இதற்கிடையே இந்திய ராணுவம் வெளியிட்ட பதிவில், ‘நீதி நிலைநாட்டப்பட்டது’ என்று அறிவித்தது.

ஒன்றிய அரசின் முன்னேற்பாடுகள்;
ஆபரேஷன் சிந்தூருக்கு முன், பாகிஸ்தானின் 5 அணு ஆயுத ஏவுகணை தளங்கள் குறித்த தகவல்களை அணு விஞ்ஞானிகளின் புல்லட்டின் அறிக்கையின் அடிப்படையில் இந்திய ராணுவம் மதிப்பீடு செய்தது. பாகிஸ்தான் தலைவர்களின் ஆத்திரமூட்டும் பேச்சுகளுக்கு பதிலளிப்பதை காட்டிலும், இந்தியா தனது ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. ஆபரேஷன் சிந்தூரை சர்வதேச சமூகத்திற்கு நியாயப்படுத்தும் வகையில், பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு கொள்கைகளை இந்தியா கடுமையாக விமர்சித்தது. பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை தகவல்களை சேகரித்த ஒன்றிய அரசு, தேசிய புலனாய்வு முகமையின் தீவிர விசாரணை அறிக்கைகள், ஆதாரங்கள், தீவிரவாதிகளின் அடையாளத்தை உறுதி செய்தல் போன்றவற்றை சேகரித்த பின்னரே இந்த தாக்குதலை நடத்த உத்தரவிட்டது. மேலும் எல்லைக் கட்டுப்பாடு கோட்டில் பாதுகாப்பு படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. பாகிஸ்தானை பொருளாதார ரீதியாகவும், ராஜதந்திர நடவடிக்கைகள் மூலமாக சர்வதேச அளவில் தனிமைப்படுத்துவது மட்டுமின்றி பாகிஸ்தானுடனான வர்த்தகம், இறக்குமதி, சிந்து நதிநீர் ஒப்பந்தம் இடைநிறுத்தம் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அட்டாரி எல்லை மூடப்பட்டு, இந்தியாவில் இருந்த பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டனர். அனைத்து கட்சிக் கூட்டங்கள் மற்றும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் குறித்த ஆலோசனைகள் மூலம் நாட்டு மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுத்தது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் 5 விமான நிலையங்கள் மூடல்;
‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலை தொடர்ந்து, வடமாநிலங்களில் 5 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த விமான நிலையங்களில் விமான சேவை இடை நிறுத்தப்பட்டுள்ளது. இதை விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன. ஜம்மு – காஷ்மீரின் நகரில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இங்கு கமர்ஷியல் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. லே, ஜம்மு, அமிர்தசரஸ், தரம்சாலா ஆகிய நான்கு விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இதை ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. ஜம்மு, நகர், லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், புஜ், ஜாம்நகர், சண்டிகர், ராஜ்கோட் உள்ளிட்ட விமான நிலையங்களில் தங்கள் விமான சேவை இன்று (மே 7) பகல் 12 மணி வரை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. மற்றொரு விமான நிறுவனமான இண்டிகோவும் தங்கள் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. விமான சேவை பாதிப்பு குறித்து சமூக வலைதளம் மூலம் பயணிகளுக்கு விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதை பொறுத்து பயணிகள் தங்கள் வான்வழி பயணத்தை திட்டமிடலாம் என கூறியுள்ளது. டெல்லிக்கு வடக்கே விமான சேவை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்தியா; ஏப். 22 மதியம் 2.30 மணிமுதல் இன்று அதிகாலை 1.44 மணி வரை நடந்தது என்ன?: ‘நீதி’ நிலைநாட்டப்பட்டதாக இந்திய ராணுவம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article