பஹல்காம் தாக்குதல் குறித்து 3 நாட்களுக்கு முன்பே பிரதமருக்கு உளவுத்துறை தகவல்: காஷ்மீர் பயணத்தை மோடி ரத்து செய்தது ஏன் காங். தலைவர் கார்கே கேள்வி

4 hours ago 2

ராஞ்சி: ஜார்க்கண்டின் ராஞ்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே பேசியதாவது: தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே மோடிஜீக்கு உளவுத்துறை அறிக்கை அனுப்பப்பட்டதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனால் தான் பிரதமர் மோடி தனது காஷ்மீர் பயணத்தை ரத்து செய்தார். உங்கள் பாதுகாப்புக்காக அங்கு செல்வது முறையல்ல என்று ஒரு உளவுத்துறை அறிக்கை கூறும்போது, மக்களை பாதுகாப்பதற்காக நீங்கள் என்ன செய்தீர்கள்.

உளவுத்துறை , உள்ளூர் காவல்துறை மற்றும் எல்லைப்பாதுகாப்பு படைகளுக்கு இது குறித்து ஏன் தெரிவிக்கவில்லை? உங்களுக்கு தகவல் கிடைத்ததும் உங்களது நிகழ்ச்சியை ரத்து செய்தீர்கள். ஆனால் அங்குள்ள சுற்றுலா பயணிகளை பாதுகாப்பதற்கு கூடுதல் படைகளை அனுப்பவில்லை. ஏப்ரல் 22ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பெரும்பாலானவர்கள் சுற்றுலா பயணிகள். இந்தியா மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொள்கிறது. அனைத்துக்கட்சி கூட்டத்தின்போது உளவுத்துறை தோல்வியை ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டது. உளவுத்துறை குறைபாடு இருப்பதாக நீங்கள்(பிரதமர்) ஒப்புக்கொண்டீர்கள்.

தீவிரவாத தாக்குதல் பற்றி அறிந்திருந்தும் மக்களை பாதுகாப்பதற்கு ஒரு அமைப்பை ஏன் உருவாக்கவில்லை? உளவுத்துறை தோல்வியை ஏற்றுக்கொள்ளும்போது பஹல்காம் தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புக்களுக்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்கக் கூடாதா? நாடு என்பது கட்சி, மதம் மற்றும் சாதிக்கு அப்பாற்பட்டது மற்றும் அவற்றை காட்டிலும் உயர்ந்தது. அதனால் தான் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகும் பாகிஸ்தானுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கைக்கும் காங்கிரஸ் ஒன்றிய அரசின் பின்னால் நிற்கிறது. ஆனால் பாஜவும், பிரதமரும் வெற்று வாக்குறுதியை மட்டுமே நம்புகிறார்கள். இவ்வாறு கார்கே பேசினார்.

* கார்கே பொறுப்பற்ற கருத்து -பாஜ
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜவை சேர்ந்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவி சங்கர் பிரசாத், ‘‘கார்கே ஒருபுறம்(அனைத்துக்கட்சி) கூட்டத்தில் அவர்கள் நாட்டுடன் நிற்கிறார்கள் என்று கூறுகிறார். மறுபுறம் அவர் நாட்டை பலவீனப்படுத்த முயற்சிக்கிறார். பாகிஸ்தானுடனான பதற்றங்கள் அதிகரித்து வரும் நேரத்தில் காங்கிரஸ் தலைவர் இதைவிட பொறுப்பற்ற கருத்தை தெரிவித்திருக்க முடியாது” என்றார்.

The post பஹல்காம் தாக்குதல் குறித்து 3 நாட்களுக்கு முன்பே பிரதமருக்கு உளவுத்துறை தகவல்: காஷ்மீர் பயணத்தை மோடி ரத்து செய்தது ஏன் காங். தலைவர் கார்கே கேள்வி appeared first on Dinakaran.

Read Entire Article