
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த நிலையில் பங்குனி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று அதிகாலை 4.15 மணியளவில் தொடங்கியது. இதையொட்டி நேற்று அதிகாலை முதல் திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் காணப்பட்டனர்.
பகலில் வெயில் கொளுத்தியதால் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் குறைந்தது. வெயிலின் தாக்கம் காரணமாக கிரிவலம் சென்ற பக்தர்கள் பலர் கையில் குடை பிடித்தபடியும், தலையில் துணியை போட்ட படியும் சென்றனர்.
பின்னர் மாலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலம் செல்வதற்காக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் திருவண்ணாமலைக்கு வருகை தந்தனர்.
கிரிவலம் தொடங்கும் முன்பு பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் எதிரில் ஏராளமானோர் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க அங்கு தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு தண்ணீர் வாகனத்துடன் தயார் நிலையில் இருந்தனர்.
மேலும் கோவிலில் நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் நின்றனர். இதனால் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டனர். சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்திற்கு மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் முதியவர்கள், கைக்குழந்தைகளுடன் வந்தவர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. வரிசையில் வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நீர், மோர் வழங்கப்பட்டது.
மேலும் கிரிவலப்பாதையில் பலர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் போன்றவை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பவுர்ணமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 6.08 மணி வரை இருந்ததால் இன்று காலை வரையில் விடிய, விடிய பக்தர்கள் கிரிவலம் சென்றபடி காணப்பட்டனர்.
அதேபோல் கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்க கோவில்கள் மற்றும் இடுக்கு பிள்ளையார் கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதுமட்டுமின்றி போலீசாரும் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் பக்தர்கள் செல்லும் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர். அத்துடன் கோவில் தேரடி வீதியில் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு இடையூறாக அமைக்கப்பட்டு இருந்த ஆக்கிரமிப்பு கடைகளையும் போலீசார் அகற்றினர்.