பெரம்பூர்: மனிதர்களின் வாழ்க்கை முறையை கொரோனா காலகட்டத்திற்கு முன், கொரோனா காலகட்டத்திற்கு பின் என இரண்டாக பிரிக்கலாம். அந்த அளவிற்கு கொரோனாவுக்கு பின் பல்வேறு இணை நோய்களால் தொடர்ந்து மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்று ஏற்பட்டதால்தான் இதுபோன்ற மாற்றங்கள் வந்துள்ளன என பெரும்பாலான மக்கள் நம்புகின்றனர். மேலும் சிலர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால்தான் பல்வேறு இணை நோய்கள் ஏற்படுகிறது என நம்புகிறார்கள். ஆனால் இதை மருத்துவ உலகம் தொடர்ந்து மறுத்து வருகிறது.
ஒரு தடுப்பூசி அனைத்து மக்களின் மரபணுக்களுக்கு ஏற்ற வகையில் இருக்குமா என்றால் அதில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. ஏற்கனவே, கொரோனா தடுப்பூசி சம்பந்தமாக பலரும் பல கேள்விகளை எழுப்பிய நிலையில் கொரோனா காலகட்டத்திற்கு பின் ஏற்படும் ஒவ்வொரு நிகழ்வுகளும் மீண்டும் நம்மை கொரோனா பாதிப்பு அல்லது கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதால்தான் இதுபோன்று நடக்கிறது என எண்ண வைக்கிறது. அந்த வகையில், பல்வேறு நாடுகளில் புதிது புதிதாக வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் ஏற்பட்டு பொதுமக்கள் புதிய நோய்களுக்கு ஆளாகின்றனர்.
படிப்படியாக அது பல்வேறு நாடுகளை கடந்து தொடர்ந்து ஒருவித அச்சப்போக்கை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் கூட மீண்டும் சீனாவில் புதிய வைரஸ் பரவுகிறது என பரபரப்பாக பேசப்பட்டது. அதன்பிறகு இது ஏற்கனவே உள்ள வைரஸ்தான். குளிர் காலத்தில் சீனாவில் அதிகப்படியான மக்கள் மருத்துவமனையில் வந்து அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவார்கள். எனவே இதை யாரும் நம்ப வேண்டாம் என அதன்பிறகு செய்திகள் வெளியாகின. இதேபோன்று, பறவை காய்ச்சல், குரங்கு அம்மை போன்ற பல நோய்கள் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் ஜிபிஎஸ் என்ற நோயும் அதிகமாக பொதுமக்களை அச்சத்தில் அழுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஒரு குறிப்பிட்ட பகுதி முழுவதும் அந்த நோய் பரவியிருப்பதை கண்டறிந்தனர். அந்த வகையில், தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் கில்லன் பாரே சிண்ட்ரோம் என்ற ஜிபிஎஸ் நோய்க்கு பாதிப்புக்கு உள்ளாகி எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சிகிச்சை பலனின்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தான். இது, ஒருவித அச்சத்தை சென்னை மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா, மேற்குவங்கத்தை தொடர்ந்து ஜிபிஎஸ் நோய்த்தொற்று தமிழகத்துக்கும் பரவி இருப்பதைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்தனர். ஜிபிஎஸ் நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட அதிக நபர்கள் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இந்த நோய் தொற்று அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்த நோய் தொற்றுப்புக்கு ஆளாகியுள்ளார்கள் என்பது கண்டறியப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட சோதனையில் 158 பேரில் 127 பேருக்கு இந்த தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
அதேபோன்று ஒரு சூழ்நிலை தமிழகத்திலும் வந்துவிடக்கூடாது என்பதற்காக ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் இருந்த திருவள்ளூர் அருகே திருவூரில் மருத்துவ குழுவினர் சோதனை செய்து பல கட்ட சோதனைகளுக்கு பிறகு வேறு யாருக்கும் நோய்தொற்று இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. பொதுவாக, இந்த நோய் எவ்வாறு பரவுகிறது. அதனை தடுக்க பொதுமக்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து பெரம்பூர் சென் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் வெங்கடேசன் கூறியதாவது:
இந்த ஜிபிஎஸ் என கூறப்படும் நோய் புதிதாக தோன்றிய நோய் கிடையாது. பல ஆண்டுகளாக உள்ள ஒரு நோய். மிகவும் அரிதாக சிலருக்கு ஏற்படும். இதற்கு சிகிச்சை முறைகளும் உண்டு, மருந்துகளும் உண்டு, மருந்துகள் இல்லை என பொதுமக்கள் முதலில் பீதி அடைய வேண்டாம். இது ஒருவிதமான வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது. சரியாக சமைக்காத இறைச்சி மற்றும் உணவு வகைகள் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்கும் உணவுகளில் ஏற்படும் பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது. மேலும் சரியாக சுத்தப்படுத்தப்படாத தண்ணீர் அல்லது கொதிக்க வைக்கப்படாத தண்ணீரில் இருக்கும் பாக்டீரியாக்கள் போன்றவற்றில் இருந்து இந்த நோய் பரவுகிறது.
குறிப்பாக, சில உணவுகள் தயார் செய்யப்பட்டு பாக்கெட்களில் அடைக்கப்பட்டிருக்கும் அதனை வாங்கி நாம் அப்படியே சமைத்து சாப்பிடுவது போல தயார் செய்யப்பட்டிருக்கும் அதுபோன்ற உணவுகளிலும் ஜிபிஎஸ் நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் பரவுகிறது. எனவே பாக்கெட்டில் வைக்கப்படும் உணவுகளை வாங்கி பொதுமக்கள் பயன்படுத்தும் போது உணவு தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் அது தரமுடன் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். குறிப்பாக, இந்த பாக்டீரியா வைரஸ்களில் நாம் தாக்கப்படும் போது என்டிரோ வைரஸ்.
கேம்பைலோ பேக்டர் பாக்டீரியா போன்றவற்றில் இருந்து இந்த நோய் அதிகம் பரவுகிறது. இந்த வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் உடல் வலி அதிகமாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். பொதுவாக, எந்த ஒரு பாக்டீரியா மற்றும் வைரஸ்களையும் எதிர்த்து நமது நோய் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி போராடும், அந்த நோய் எதிர்ப்பு சக்தியை தடுத்து நிறுத்தக் கூடிய வேலையை இந்த ஜிபிஎஸ் பாக்டீரியா மற்றும் வைரஸ் செய்கிறது.
இது கொஞ்சம் கொஞ்சமாக உடலில் கலந்து நரம்புகளை முதலில் பாதிக்கிறது. படிப்படியாக பாதிப்படையும்போது ஆரம்பத்தில் கால்கள் மரத்துப்போகும். அதன்பிறகு கை மறத்து போகும். இதை நாம் கண்டுகொள்ளாமல் விட்டால் படிப்படியாக சென்று முதுகு தட்டு வடத்தை பாதித்து நரம்பு மண்டலங்களை செயலிழக்க செய்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் ஏற்படலாம். இந்த கிருமி முதலில் உடலில் செல்லும் போது சளி, இருமல், காய்ச்சல், லேசான மூச்சு திணறல் உள்ளிட்டவை ஏற்படும்.
நாம் சாதாரண காய்ச்சல் என எடுத்துக் கொண்டால் படிப்படியாக இது அடுத்த நிலைகளை அடையும். எனவே, எதுபோன்ற காய்ச்சல், சளி ஏற்படுகிறது என்பதை மருத்துவரிடம் சென்று நாம் பரிசோதனை செய்து கொள்ளும்போது அதற்கான மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் அடுத்தடுத்த கட்ட பிரச்னைகளில் இருந்து நாம் தப்பிக்கலாம். ஆரம்பத்திலேயே இந்த நோயைக் கண்டறிந்தால் மிக எளிமையாக மருந்து, மாத்திரைகள் மூலம் சரி செய்து விடலாம்.
முன்பு இருந்த மருத்துவ வசதிகளை விட ஜிபிஎஸ் நோய்க்கு பல மருந்து, மாத்திரைகள் வந்துவிட்டன. அதனால் பொதுமக்கள் இதனைக் கண்டு அச்சமடைய வேண்டாம். இந்த நோயை ஆரம்பக்கட்டத்தில் விட்டு விட்டால் அதன்பிறகு இமினோதெரபி என்னும் சிகிச்சை முறையை பயன்படுத்தி நோய் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தனியார் மருத்துவமனைகளில் இதற்கு அதிகப்படியான செலவுகள் செய்ய வேண்டி இருக்கும்.
தற்போது, அனைத்து அரசு மருத்துவமனைகளும் இதற்கான சிகிச்சை முறை உள்ளது. மேலும் இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும். அப்போதுதான் நோயின் தீவிரம் எப்படி உள்ளது என்பதை கண்டறிந்து வைத்தியம் பார்க்க முடியும். பொதுவாக, சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளுடன் கை கால் வலி அதிகமாக இருந்தால் ஜிபிஎஸ் தொற்று உள்ளதா என்பதை கண்டறிய இஎம்ஜி எனப்படும் எலக்ட்ரோ வைலோகிராபி என்ற சோதனையின் மூலம் குறிப்பிட்ட இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறியலாம்.
இந்த தொற்றின் மூலம் செல்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் எம்ஆர்ஐ சோதனை மூலமும் கண்டறியலாம். முதுகு தண்டில் இருந்து எடுக்கப்படும் நீரின் மூலமாகவும் இந்த தொற்று பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறியலாம். இதுபோன்ற சோதனைகள் மூலம் ஜிபிஎஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறியலாம்.
எனவே பொதுமக்கள் சாதாரண காய்ச்சல், சாதாரண சளி என நினைத்து நீண்ட நாட்களுக்கு தாங்களாகவே மருந்து எடுத்துக் கொள்ளும் நடைமுறையை பின்பற்றாமல் உடலில் எது போன்ற பாதிப்புகள் வந்தாலும் அடுத்த இரண்டு நாட்களுக்குள் மருத்துவரை அணுகி எதுபோன்ற பாதிப்புகள் வந்துள்ளன. அதனை தீர்க்க என்ன வழி என்பதை கண்டறிந்து மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் தண்ணீர் மற்றும் உணவு விஷயத்தில் மக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடும்போது நன்றாக வேக வைத்து ஆரோக்கியமான உணவாக சாப்பிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
* புதிய வைரஸ் இல்லை
1916ம் ஆண்டு இரண்டு மருத்துவர்கள் சேர்ந்து ஜிபிஎஸ் என்ற நோய் குறித்து கண்டறிந்துள்ளனர். வழக்கமாக நோய் தொற்று ஏற்பட்டால் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ள திசுக்களை அது பாதிக்கும். ஆனால் ஜிபிஎஸ் வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டால் அது நரம்பு மண்டலத்தை பாதிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நோய்கள் வந்து அது சரியாகும்போது கூடவே இணை நோயாளாக இந்த ஜிபிஎஸ் வருவதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய் பெண்களை விட ஆண்களையே அதிகம் பாதிக்கும் தன்மையுடையது.
* அரசு மருத்துவமனைகளில் கூடுதல் வசதி
ஜிபிஎஸ் நோய் ஆரம்பக்கட்டத்தில் கண்டறியப்பட்டால் மருந்து, மாத்திரைகள் மூலம் சரி செய்து விடலாம். ஆனால் சிறிது காலம் கழித்து கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கு தனியார் மருத்துவமனைகளில் மிக அதிக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஆனால் அரசு மருத்துவமனைகளில் இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு 5 நாட்கள் தினமும் ஐசியு எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு தினமும் ஒரு ஊசி செலுத்தப்படுகிறது. தொடர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதன் மூலம் அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்லாமல் நோயின் தீவிரத்தை தடுத்து நிறுத்தி எளிதில் அதிலிருந்து விடுபடலாம்.
* இணை நோயால் கூடுதல் பாதிப்பு
பொதுவாக ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்ப கட்டத்திலேயே மருந்துகளை எடுத்துக் கொண்டால் எளிய முறையில் வெளியே வந்து விடலாம். அதே நேரம் இதய நோய், புற்றுநோய், எச்ஐவி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஜிபிஎஸ் கிருமியால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு பாதிப்பு சற்று அதிகமாக இருக்கிறது. எனவே இணை நோய் உள்ளவர்கள் இதுபோன்ற புதிய நோய்கள் வரும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் ஆரம்பத்திலேயே மருத்துவர்களை கண்டறிந்து எது போன்ற தொற்றுகள் ஏற்பட்டுள்ளன என்பதை கண்டுபிடித்து அதற்கு ஏற்ற முறையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
The post பழைய வைரஸ் புதிய அவதாரம் அச்சுறுத்தும் ஜிபிஎஸ் நோய்: உணவு, குடிநீரில் அதிக கவனம் செலுத்த வேண்டும் மருத்துவர்கள் எச்சரிக்கை appeared first on Dinakaran.