பழங்குடியினர் கிராமங்களில் ரூ.1.8 கோடியில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை கலெக்டர் ஆய்வு

3 weeks ago 5

ஊட்டி : கோழிக்குட்டை மற்றும் கொப்பையூர் ஆகிய ரூ.1.8 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 19 பழங்குடியினர்களுக்கான குடியிருப்புகளை நீலகிரி மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், கடினமாலா ஊராட்சியில் பிரதம மந்திரி ஜென்மன் திட்டத்தின்கீழ் நிதி அயோக் மூலம் மாதிரி கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கோழிக்குட்டை மற்றும் கொப்பையூர் ஆகிய பழங்குடியின கிராமத்தில் தலா ரூ.5.73 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1.8 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 19 பழங்குடியினர்களுக்கான குடியிருப்பு (கோழிக்குட்டையில் 6 குடியிருப்புகள், கொப்பையூரில் 13 குடியிருப்புகள்) கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

முதலாவதாக, கோழிக்குட்டை மற்றும் கொப்பையூர் பழங்குடியின கிராமங்களில், பிரதம மந்திரி ஜென்மன் திட்டத்தின்கீழ் நிதி அயோக் மூலம் மாதிரி கிராமமாகசாலை வசதி, வீடு வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு, மின்சார வசதி, நடமாடும் மருத்துவக்குழு, அங்கன்வாடி மையம் உள்ளதா, கிராமத்திலுள்ள குழந்தைகள் அங்கன்வாடிக்கு அனுப்பப்படுகின்றனரா, சுகாதார பணியாளர் இரத்த அழுத்த பரிசோதனை மற்றும் சர்க்கரை உள்ளிட்ட நோய்கள் குறித்து பரிசோதிக்கிறார்களா, மகளிர் சுய உதவிக்குழு உள்ளதா, சமுதாயக் கூடம் உள்ளதா, கிராமத்திலுள்ளவர்களுக்கு வங்கி கணக்கு உள்ளதா, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை கிடைக்கப் பெறுகிறதா உள்ளிட்டவை குறித்து, கிராம மக்களிடம் கலந்துரையாடி, அப்பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அரக்கோடு ஊராட்சி சேலாரை பழங்குடியினர் கிராமத்தினை நேரில் பார்வையிட்டு, அங்குள்ள பழங்குடியினர்களுடன் கலந்துரையாடி, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், தேனாடு ஊராட்சியில், நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.5.73 கோடி மதிப்பீட்டில் பொம்மன் முதல் வக்கனமாரா வரை அமைக்கப்பட்டு வரும் சாலைப்பணியினை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கோத்தகிரி வட்டாட்சியர் கோமதி, கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதர், விஜயா, மாவட்ட திட்டமிடும் அலுவலக புள்ளியல் அலுவலர் வெங்கடேசன், ஒருங்கிணைப்பாளர் தட்சாயினி, கடினமாலா ஊராட்சித்தலைவர் சாந்தி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post பழங்குடியினர் கிராமங்களில் ரூ.1.8 கோடியில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article