பள்ளிப்பட்டு அருகே பரபரப்பு பல்லி இறந்து கிடந்த குச்சி ஐஸ் சாப்பிட்டு 10 குழந்தைகள் மயக்கம்: அரசு மருத்துவமனையில் சிகிச்சை

1 day ago 2

திருத்தணி, மே 14: பல்லி இறந்து கிடந்த குச்சி ஐஸ் சாப்பிட்டு 10 குழந்தைகள் மயக்கமடைந்த சம்பவம் பள்ளிப்பட்டு அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவர் பள்ளிப்பட்டில் சிவசக்தி ஐஸ் கம்பெனியில் மொத்தமாக ஐஸ் வாங்கிக்கொண்டு பைக்கில் சென்று கிராமங்களில் ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார். அதன்படி நேற்று 500 குச்சி ஐஸ் வாங்கிக்கொண்டு வெங்கடாபுரம் அருந்ததி காலனியில் அவர் வியாபாரத்தில் ஈடுபட்டார். ரூ.10 வீதம் குழந்தைகளுக்கு அவர் ஐஸ் விற்றுள்ளார்.

இந்தநிலையில் குழந்தைகள் குச்சி ஐஸை சுவைத்தபோது அதில் இறந்த குட்டி பல்லி இருந்துள்ளது. இதனைப் பார்த்து குழந்தைகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிறிது நேரத்தில் குச்சி ஐஸ் சாப்பிட்ட அக்கிராமத்தைச் சேர்ந்த 10 குழந்தைகளுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களை பெற்றோர் உடனடியாக அத்திமாஞ்சேரிபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்ற குழந்தைகள் வீடு திரும்பினர். இதில் வரதராஜன் என்பவரின் மகன் நிதீஷ் (5), சேகர் என்பவரின் மகன் சந்திரா (4) ஆகிய இருவரும் தொடர்ந்து மயக்க நிலையில் இருந்ததால், திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குழந்தைகள் சாப்பிடும் குச்சி ஐஸில் குட்டி பல்லி இறந்து கிடந்தது குறித்து பள்ளிப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐஸ்ஸில் பல்லி இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் மற்றும் சுகாதார அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பள்ளிப்பட்டு அருகே பரபரப்பு பல்லி இறந்து கிடந்த குச்சி ஐஸ் சாப்பிட்டு 10 குழந்தைகள் மயக்கம்: அரசு மருத்துவமனையில் சிகிச்சை appeared first on Dinakaran.

Read Entire Article