புதுச்சேரி, பிப். 14: புதுச்சேரி முருங்கபாக்கம் வில்லியனூர் மெயின் ரோட்டில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். புதுச்சேரி முதலியார்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ஷீக் அலவுதீன் தலைமையில் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்ட கொண்டிருந்தனர். அப்போது முருங்கபாக்கம் வில்லியனூர் மெயின் ரோட்டில் உள்ள அரசு பள்ளி அருகே மர்ம நபர் ஒருவர், பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு தெற்கு எஸ்பி பக்தவத்சலம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஷீக் அலவுதீன் மற்றும் போலீசார் சென்றனர்.
அப்போது போலீசாரை பார்த்ததும், அந்த நபர் தப்பி செல்ல முயன்றுள்ளார். உடனே போலீசார் அந்த நபரை துரத்தி சென்று பிடித்து சோதனை செய்தபோது, அவரிடம் கஞ்சா இலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில், முதலியார்பேட்டை அனிதா நகரை சேர்ந்த சுமன் (எ) சுமன்ராஜ் (20) என்பதும், பணத்துக்காக பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து போலீசார் சுமன் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து 104 கிராம் கஞ்சா இலை, ஒரு செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
The post பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.