பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

3 months ago 19

திருவள்ளூர்: வெங்கத்தூர் பகுதியை தனி ஊராட்சியாக மாற்ற வலியுறுத்தியும், ஏரியில் கழிவுநீர் கலப்பதை கண்டித்தும், கழிவுநீரை பாட்டிலில் கொண்டு வந்து பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், வெங்கத்தூர் முதல்நிலை ஊராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் வெங்கத்தூர் பகுதி 15வது வார்டில் வருகிறது.

இது நீர்வளம் மிக்க பகுதி ஆகும். விவசாய வளம் நிறைந்த பகுதியாக உள்ளது. மேலும் வெங்கத்தூர் ஏரியில் இருந்து விவசாயத்திற்கு நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஏரியில் சிலர் குப்பைகளை கொட்டியும், கழிவுநீரை திறந்து விட்டும் ஏரியை மாசுபடுத்தி விட்டனர். தற்போது இந்த ஏரியில் உள்ள நீர் மாசடைந்து விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் நிலத்தடி நீரும் பாதிக்கும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் வெங்கத்தூர் ஊராட்சி முழுவதும் சேரும் குப்பைகளை வெங்கத்தூர் பகுதியில் கொட்டவும், மேலும் அங்கு மின் தகன மேடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை அறிந்த வெங்கத்தூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று வெங்கத்தூர் முதல் நிலை ஊராட்சியில் உள்ள 15வது வார்டு உள்ள வெங்கத்தூர் பகுதியை தனி ஊராட்சியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வெங்கத்தூர் பகுதியில் குப்பைகளை கொட்டும் திட்டத்தை கைவிட வேண்டும்,

பொதுமக்கள் பாதிக்கும் வகையில் மின்தகன மேடை அமைப்பதையும் கைவிட வேண்டும் என வலியுறுத்தியும், ஏரியில் கழிவுநீர் கலப்பதால் ஏரி மாசடைவதை கண்டித்து ஏரியில் கலக்கப்பட்ட மாசடைந்த தண்ணீரை பாட்டிலில் கொண்டு வந்து வெங்கத்தூர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.சசிகுமார் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இது சம்பந்தமாக நேரடியாக வந்து கள ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் போது ஹரிபாபு, வழக்கறிஞர்கள் ஆர்.பிரேம்குமார், தியாகராஜன், தங்க அரசு மற்றும் சந்நிரசேகர், வி.வினோத், பாக்யராஜ், தங்க குமார், ராஜி, பரந்தாமன், பவானி உள்பட பலர் உடனிருந்தனர்.

The post பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முற்றுகை appeared first on Dinakaran.

Read Entire Article