பலாத்காரம் செய்யப்பட்ட 2½ வயது சிறுமி உயிரிழப்பு - தாயின் காதலன் கைது

6 hours ago 4

மும்பை,

மும்பை மால்வாணி பகுதியை சேர்ந்த 30 வயது பெண் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு 2½ வயது மகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில் அந்த பெண்ணுக்கும், 19 வயது வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.

சம்பவத்தன்று இரவு பெண்ணும், வாலிபரும் வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் வாலிபர் பெண்ணின் 2½ வயது மகளை அவளது கண்முன்பே பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சிறுமியின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயந்துபோன பெண் தனது மகளை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

அங்கு டாக்டரிடம் தனது மகளுக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதாக கூறி சிகிச்சை அளிக்கும் படி கூறினார். ஆனால் சிறுமியின் அந்தரங்க உறுப்பில் காயம் இருந்ததால், போலீசுக்கு தகவல் கொடுத்து விட்டு டாக்டர்கள் சிகிச்சையை தொடங்கினர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.

இதையடுத்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சிறுமியின் தாயிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், சிறுமி பெண்ணின் 19 வயது காதலனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும், அதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்ததும் தெரியவந்தது.

இந்த கொடூர சம்பவம் குறித்து மால்வாணி போலீசார் போக்சோ மற்றும் கொலை உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் தாயையும், அவரது காதலனையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article