பலத்த சூறைக்காற்றுடன் மோசமான வானிலை நிலவியதால் மொரிஷியஸ் விமானம் ரத்து

3 hours ago 3

மீனம்பாக்கம்: மொரிஷியஸ் நாட்டிலிருந்து ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அதிகாலை 1.50 மணியளவில் ஏர் மொரிஷியஸ் பயணிகள் விமானம் சென்னைக்கு வரும். பின்னர் அதே விமானம் அதிகாலை 3.35 மணியளவில் பயணிகளுடன் மொரிஷியஸ் புறப்படும். மொரிஷியஸ் நாட்டில் மருத்துவம், பொறியியல் சார்ந்த பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில், தமிழ்நாடு உள்பட பல்வேறு தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும் மொரிஷியஸ் சுற்றுலா தலமாக விளங்குவதால் ஏராளமானோர் செல்வது வழக்கம்.

இந்நிலையில், வழக்கம் போல இன்று அதிகாலை 1.50 மணியளவில் சென்னைக்கு வரவேண்டிய ஏர் மொரிஷியஸ் பயணிகள் விமானம் நீண்ட நேரமாகியும் வந்து சேரவில்லை. அந்த விமானத்தில் செல்ல 277 பயணிகள் காத்திருந்தனர். மொரிஷியசில் நேற்று பலத்த சூறைக்காற்றுடன் மோசமான வானிலை நிலவியதால் அந்த விமானம் சென்னைக்கு வரவில்லை. அதனால் வருகை மற்றும் புறப்பாடு ரத்து செய்யப்பட்டது. அந்த விமானம் இன்றிரவு புறப்பட்டு, நாளை அதிகாலை சென்னை வந்து சேரும். பின்னர் இங்கிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வழக்கமான நேரத்தில் மொரிஷியஸ் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இத்தகவல் கிடைக்காத பயணிகளில் பலர் விமான நிலையத்துக்கு வந்துவிட்டனர். அவர்களை நாளை வந்து பயணம் மேற்கொள்ளும்படி அறிவுறத்தி அனுப்பினர். அதே நேரத்தில் இயற்கையால் ஏற்பட்ட பாதிப்புக்கு, நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே, இன்று மொரிஷியசில் இருந்து சென்னை வரவேண்டிய விமானத்தில அந்நாட்டு முன்னாள் துணை அதிபர் பரமசிவம் வையாபுரி வருவதாக இருந்தது. இன்று விமான சேவை ரத்து காரணமாக, அவரது சென்னை பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

The post பலத்த சூறைக்காற்றுடன் மோசமான வானிலை நிலவியதால் மொரிஷியஸ் விமானம் ரத்து appeared first on Dinakaran.

Read Entire Article