பல மொழிகள் என்றால் இந்தியா ஒரே நாடாக இருக்கும்; ஒரே மொழி என்றால்... - சீமான் எச்சரிக்கை

1 week ago 4

திருப்பூர்,

மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமான சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ.2 ஆயிரத்து 152 கோடி கல்வி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. இந்த நிலையில் புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி கிடையாது என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இதற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் "பல மொழிகள் என்றால் இந்தியா ஒரே நாடாக இருக்கும்; ஒரே மொழி என்றால் பல நாடுகள் பிறக்கும்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

தாய்மொழியில் நல்ல அறிவு, புலமை, தெளிவு இருந்தால் உலக மொழிகள் எதையும் எளிதாக கற்றுக் கொள்ள முடியும். மத்திய அரசு குறிப்பிட்ட ஒரு மொழியை கட்டாயமாக படிக்கவேண்டும் என்று சொல்வதன் நோக்கம் என்ன? ஏற்கனவே ஒன்றரை கோடி இந்தி பேசுபவர்களை திணித்து விட்டீர்கள். இந்தி நாடாக மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். இதில் இந்தியை வேறு திணிக்க முயற்சிக்கிறீர்கள்.

எந்த ஒரு தேசிய இனத்திற்கும் கொள்கை மொழியாக அவரவர் தாய்மொழிதான் இருக்க முடியும். தொடர்பு மொழி, பயன்பாட்டு மொழியாக ஆங்கிலம் இருக்கலாம். தேவை மொழியாக எந்த மொழியும் இருக்கலாம். அதில் இந்தியும் இருக்கலாம். கட்டாயமாக படி என்று கூறக்கூடாது. பல மொழிகள் என்றால் இந்தியா ஒரே நாடாக இருக்கும்; ஒரே மொழி என்றால் பல நாடுகள் பிறக்கும். இதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.

இந்தியை கட்டாயமாக படிக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது. அதற்காக புதிய கல்விக் கொள்கையை மாநில அரசு ஏற்கவில்லை என்றால் அது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article