பல பெண்களை ஏமாற்றிய காதல் மன்னன்.. செல்போனை பார்த்து அதிர்ச்சி அடைந்த புதுப்பெண்

1 month ago 6

சென்னை,

கன்னியாகுமரி மாவட்டம் நெய்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த 27 வயதாகும் லிஜின் என்பவருக்கும் சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 23 வயதான பெண் என்ஜினியருக்கும் இருவீட்டு பெற்றோர் ஏற்பாட்டின் பேரில், உறவினர்கள் முன்னிலையில் கடந்த 2-ந் தேதி சென்னை வண்ணாரப்பேட்டையில் திருமணம் நடந்தது.

முன்னதாக கடலூரை சேர்ந்த இளம்பெண், மணமகன் லிஜின் தன்னை காதலித்து திருமணம் செய்து ஒரு வருடம் குடும்பம் நடத்தி ஏமாற்றி விட்டதாக தேவாலயத்தில் திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்றார். அத்துடன் புதுப்பெண் ஏமாறக்கூடாது என்று கண்ணீர் விட்டு அழுது திருமணத்தை நடக்கவிடாமல் தடுத்து நிறுத்த எவ்வளவோ போராடினார். அத்துடன் லிஜினை தனோடு சேர்த்துக்வைக்க வேண்டும் எனவும் கோரினார்.

ஆனால் லிஜின், அவரை திருமணம் செய்து கொண்டதற்கான எந்தவித ஆவணங்களும் இளம்பெண்ணிடம் இல்லை. இதனால் அவர் பணம் பறிக்க நாடகமாடுவதாக கூறிய லிஜின் மற்றும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தண்டையார்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். அதன்பிறகு தான் பெண் என்ஜினிருக்கும், லிஜினுக்கும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்து முடிந்தது.

திருமணம் முடிந்த பின்னர் பெண் வீட்டாருக்கும், உறவினர்களுக்கும் லிஜின் மீது சந்தேகம் வந்தது. திருமண நேரத்தில் பெண் ஒருவர் சண்டை போட்டதால், அவர்கள் ரகசியமாக லிஜின் குறித்து விசாரிக்க தொடங்கினார்கள். இதன்படி லிஜினின் செல்போனை, அவரது புது மனைவியான பெண் என்ஜினியர் ஆய்வு செய்தார்.

அதில் லிஜினுக்கு இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதும், அந்த பெண்களுடன் அவர் பேசிய உரையாடல் இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடந்த 2019-ம் ஆண்டு காரைக்காலை சேர்ந்த பெண்ணை காதலித்து, ஆசை வார்த்தை கூறி 6 மாதம் கர்ப்பம் ஆக்கி உள்ளார். இதுபற்றி இளம்பெண் கொடுத்த புகாரின்பேரில் காரைக்கால் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அப்போது அந்த பெண்ணுக்கு ரூ.5 லட்சம் கொடுத்து சமாதானம் பேசி முடித்துள்ளனர்.

அதேபோல் 2022-ம் ஆண்டு தென்காசியை சேர்ந்த பெண்ணை காதலித்து ஏமாற்றி இருக்கிறார். இந்தநிலையில்தான் 2023-ம் ஆண்டு கடலூரை சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி ஏமாற்றியதும், இதனால் அவர் சென்னை வந்து திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்றதும் அந்த புதுப்பெண்ணுக்கு தெரிய வந்தது.

இது தொடர்பாக லிஜினின் பெற்றோரை தொடர்பு கொண்டபோது அவர்களது செல்போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தங்களை நம்ப வைத்து ஏமாற்றி மகளை திருமணம் செய்து கொண்டதாக பெண் என்ஜினியரின் பெற்றோர், வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல பெண்களை காதலித்து ஏமாற்றி பணம் பறித்த காதல் மன்னன் லிஜினை கைது செய்தனர்.

Read Entire Article