பல திட்டங்களுக்கு வெறும் ரூ.1000 மட்டுமே ஒதுக்கியது ஒன்றிய அரசு: தமிழ்நாட்டில் முடங்கிக் கிடக்கும் ரயில்வே திட்டப் பணிகள்: நடப்பாண்டில் ஒதுக்கீடு ரூ.6362 கோடி, செலவு ரூ.1536 கோடி

3 hours ago 1

* நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் வெறும் ரூ.1500 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் (2024-25) ஒன்றிய அரசு தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் தமிழகத்தில் 10 புதிய ரயில் பாதை திட்டங்கள், 3 அகல பாதை திட்டங்கள் மற்றும் 9 இரட்டை வழி பாதை திட்டங்கள் அடங்கும். இவற்றில் புதிய ரயில் பாதைக்கு ரூ.246 கோடியும் அகலப் பாதை திட்டத்திற்கு ரூ.478 கோடியும் இரட்டை வழி பாதைக்கு ரூ.812 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக நடப்பு நிதியாண்டில் மேற்கண்ட திட்டங்களுக்கு ரூ.1,536 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்ட பல்வேறு ரயில்வே திட்டங்களில் நடப்பு நிதியாண்டு வரை பல பணிகள் நிலுவையில் உள்ளன.

* தற்போது வரை நிலுவையில் உள்ள ரயில் பாதை திட்டங்கள்
1. திண்டிவனம் – திருவண்ணாமலை (செஞ்சி வழியாக 70 கிலோமீட்டர்) புதிய ரயில் பாதை திட்டத்தின் மதிப்பு ரூ. 900 கோடி. இந்த திட்டமானது 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை ரூ.72.87 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 4 பெரிய பாலங்கள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளன. கடந்த பட்ஜெட்டில் இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது ரூ. 1000 மட்டுமே.
2. திண்டிவனம் – நகரி திட்டம் (179 கிலோ மீட்டர்) 2008 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்த திட்டத்தின் தற்போதைய மதிப்பு ரூ.3631 கோடி. இந்த திட்டத்திற்கு ரூ.806 கோடி இதுவரை செலவிடப்பட்டு இருக்கிறது. இதற்கு தேவையான 594 ஹெக்டர் நிலத்தில் 510 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலம் கையகப்படுத்தபட்ட பின்னரே திட்டத்தின் பணிகள் தொடரும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த பட்ஜெட்டில் இத்திட்டத்துக்கு ரூ.153.27 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
3. அத்திப்பட்டு – புத்தூர் (88.30 கி.மீ.) திட்டம். 2008- இல் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.1105 கோடி. இத்திட்டத்துக்கான நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தியது. ஆனால். தமிழ்நாடு தொழில்துறை நோக்கங்களுக்காக நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் கீழ் இந்த நிலங்கள் இருந்ததால், சென்னை உயர் நீதிமன்றம் நிலம் கையகத்தை ரத்து செய்தது. இதனால் இந்த திட்டமும் முடங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கும் 2024 -25 பட்ஜெட்டில் ரூ.1000 மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
4. ஈரோடு – பழனி (91.05 கி.மீ.) ரயில் பாதை திட்டம் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது காங்கேயம் – தாராபுரம் வழியாக செல்லும். இந்த திட்டத்தின் தற்போதைய மதிப்பு ரூ.1140 கோடி. இந்த திட்டத்தில் குறிப்பிடத்தக்க எந்த பணிகளும் இதுநாள்வரை நடைபெறவில்லை. இந்த திட்டத்திற்கு நடப்பு பட்ஜெட்டில் ரூ.1000 ஒதுக்கப்பட்டது.
5. சென்னை-மாமல்லபுரம்-கடலூர் (179.28 கிமீ) திட்டம். இதன் மொத்த மதிப்பு ரூ. 2670 கோடி. தற்போது புதுச்சேரி அரசின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் சர்வே நடத்தப்பட்டு வருகிறது. சர்வே முடிந்த பின்புதான் இந்த திட்டப் பணிகள் தொடங்கப்படும். இந்த திட்டத்திற்கும் நடப்பு பட்ஜெட்டில் ரூ.1000 மட்டுமே ஒதுக்கப்பட்டது.
6. மதுரை-அரும்புக்கோட்டை-தூத்துக்குடி (143.5 கி.மீ.) திட்டம் 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் தற்போதைய மதிப்பு ரூ.2053 கோடி. இதற்கு 771 ஹெக்டர் நிலம் தேவைப்படுகிறது. 90 ஹெக்டர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் மீளவிட்டான் – மேல்மருதூர் இடையே 18 கிலோ மீட்டருக்கு பணிகள் முடிந்து தற்போது அந்த பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் பணிகள் தற்போது வரை நடைபெற்று வருகிறது. நடப்பு பட்ஜெட்டில் ரூ.18.72 கோடி ஒதுக்கப்பட்டது.
7. ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி (60 கி.மீ.) ரயில் பாதை திட்டமானது, இருங்காட்டுகோட்டை – ஆவடிக்கான ஸ்டெர்லைன் போடுவதற்காக 2013 -14 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திட்டமாகும். இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.1500 கோடி. இதற்கான இடம் சரிபார்த்தல் என்பது நடைபெற்று வருகிறது. இது முடிந்த பிறகுதான் எவ்வளவு நிலம் தேவைப்படும் என்பதை ரயில்வே நிர்வாகம் அறிவிக்கும். இதனால் இந்த திட்டமும் நிலுவையில் உள்ளது. இதற்காக கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி ரூ.1000 மட்டுமே.
8. மொரப்பூர் – தருமபுரி ரயில் பாதை திட்டம் (36 கி.மீ). இதன் தற்போதைய மதிப்பு ரூ.358.95 கோடி. ஆனால் இதற்கு வெறும் ரூ.49.69 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக அரசு கையகப்படுத்தியுள்ள நிலங்கள், சில காரணங்களால் ரயில்வே வசம் ஒப்படைக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த திட்டமும் நிலுவையில் உள்ளன. இத்திட்டத்துக்கு நடப்பு பட்ஜெட்டில் ரூ.49.7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
9. ராமேஸ்வரம் – தனுஷ்கோடி திட்டம் (17.2 கிமீ ) 2019 இல் தொடங்கப்பட்டது. தற்போது இதற்கான மதிப்பு ரூ.208.29 கோடி. சூழலியலை கருத்தில் கொண்டு இத்திட்டத்தை கைவிட வேண்டுமென தமிழக அரசு ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பியது. இதனால் இந்த திட்டம் நிலுவையில் உள்ளது. நடப்பு பட்ஜெட்டில் இந்த திட்டத்திற்கு 56.88 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
10. காரைக்கால் துறைமுகம் – பேரளம் திட்டம். இது 24 கிலோமீட்டர் தொலைவில் அமையவுள்ளது. இது அகலப் பாதை திட்டத்தின் கீழும் வருகிறது. இதற்கு புதுச்சேரி அரசு நிலம் தர வேண்டி இருக்கிறது, எனவே இத்திட்டமும் நிலுவையில் உள்ளது. இதற்கு, முந்தைய பட்ஜெட்டில் 104 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* நிலுவையில் உள்ள அகலப்பாதை திட்டங்கள்
1. நாகப்பட்டினம்- திருத்துறைப்பூண்டி- வேளாங்கண்ணி திட்டம். இந்த திட்டத்திற்கு 100 சதவீதம் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் 11 பாலங்கள் 172 சிறிய பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. இது காரைக்கால் துறைமுகம் – பேரளம் திட்டத்தோடு இணைகிறது. இதனால் இந்த திட்டமும் நிலுவையில் உள்ளது.
2. மன்னார்குடி – பட்டுக்கோட்டை திட்டம் 2011 -12 நிதியாண்டில் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தின் தற்போதைய மதிப்பு ரூ.713.44 கோடி. 152 ஹெக்டர் நிலம் தேவைப்படும் நிலையில் இன்னும் கையகப்படுத்தாமல் இருப்பதால் இத்திட்டம் நிலுவையில் உள்ளது.
3. தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை அகலப்பாதை திட்டம் 2012 – 2013 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.957.87 கோடி. இதை செயல்படுத்துவதற்கு 196 ஹெக்டர் நிலம் தேவை. மத்திய அரசின் உள்கட்டமைப்பு மற்றும் திட்ட கண்காணிப்பு துறை மாதாந்திர திட்ட முன்னேற்றம் தொடர்பான அறிக்கையில் இவ்விரு திட்டங்களுக்கும் விரிவான திட்ட மதிப்பிற்கு இதுவரை தொகை அளிக்கவில்லை. மேற்கண்ட இரண்டு திட்டங்களுக்கும் 37.16 கோடி ருபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

* இரட்டை ரயில் பாதை திட்டம்
1. விழுப்புரம் – காட்பாடி (160 கிலோ மீட்டர்)
2. சேலம் – கரூர்- திண்டுக்கல் ( 160 கிலோ மீட்டர்)
3. ஈரோடு – கரூர் ( 65 கிலோ மீட்டர்)
4. விழுப்புரம் – திண்டுக்கல் ( 273 கிலோமீட்டர்). இந்த நான்கு திட்டங்களுக்கும் கடந்த பட்ஜெட்டில் 1000 ருபாய் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சேலம் – கரூர்- திண்டுக்கல், ஈரோடு – கரூர் ஆகிய திட்டங்களுக்கு இறுதிக்கட்ட சர்வே பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் இந்த திட்டங்களும் நிலுவையில் உள்ளன.
5. திருவள்ளூர் – அரக்கோணம் (26.83 கிலோமீட்டர்) இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கு 1.27 கோடி ருபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனுடைய பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
6. ஓமலூர் – மேட்டூர் அணை (29.03 கிலோ மீட்டர் ) இரட்டை பாதை திட்டத்திற்கு 2.05 கோடி ருபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.
7. மதுரை- மணியாச்சி – தூத்துக்குடி (160 கிலோமீட்டர்) இரட்டை பாதை திட்டத்திற்கு 200 கோடி ருபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.
8. சேலம் – மேக்னசைட் (11 கிலோமீட்டர்) திட்டத்திற்கு 8.70 கோடி ருபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது.
9. மணியாச்சி – நாகர்கோவில் (102 கிலோமீட்டர் ) திட்டத்திற்கு 165.88 கோடி ருபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, ரயில்வே அமைச்சகம் தெற்கு ரயில்வேயை விட 110 மடங்கு வடக்கு ரயில்வேவுக்கு நிதி ஒதுக்கியது. அதிலும், பல திட்டங்களுக்கு வெறும் ரூ.1000 ஒதுக்கி தமிழ்நாட்டிற்கான திட்டங்களை செயல்படுத்தாமல் உள்ளது. அதே போன்று பல பணிகள் நடக்காமல் இருப்பதற்கு காரணம் தமிழ்நாடு அரசுதான் காரணம் என ஒன்றிய அரசு பொய் குற்றச்சாட்டு வைத்து வருகிறது.

இந்நிலையில் பிப்.1ம் தேதி ஒன்றிய அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது. எனவே கடந்தாண்டை போல வெறும் ரூ.500 ,1000 என நிதி ஒதுக்காமல், இம்முறை கூடுதல் நிதி ஒதுக்கி தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தமிழ்நாட்டு மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

The post பல திட்டங்களுக்கு வெறும் ரூ.1000 மட்டுமே ஒதுக்கியது ஒன்றிய அரசு: தமிழ்நாட்டில் முடங்கிக் கிடக்கும் ரயில்வே திட்டப் பணிகள்: நடப்பாண்டில் ஒதுக்கீடு ரூ.6362 கோடி, செலவு ரூ.1536 கோடி appeared first on Dinakaran.

Read Entire Article