பறவைகள் வாழ்விடமாக அறிவிக்க வேண்டும் கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு கலெக்டர் தடை விதிப்பு: அன்புமணி வரவேற்பு

2 weeks ago 5

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கடந்த ஓராண்டுக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறேன். இது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் 21ம் நாள் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளருக்கும் செங்கை மாவட்ட ஆட்சியருக்கும் நான் கடிதம் எழுதினேன், அதைத் தொடர்ந்து சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் சுற்றுலாவால் சுற்றுச்சூழல், கிழக்குக் கடற்கரைச் சாலையின் பல்வேறு பகுதிகளுக்கு வலசை வரும் பறவைகள் ஆகியவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகள், சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

இந்நிலையில், சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பிருப்பதைக் காரணம் காட்டி ஹெலிகாப்டர் சுற்றுலாவை தடை செய்துள்ள செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், அதன் கோவளம் அலுவலகத்திற்கு தடை விதித்திருக்கிறார்.
கோவளம் பகுதியில் ஹெலிகாப்டர் சேவை செயல்படுத்தப்படுவதால், கிழக்குக் கடற்கரை சாலையில் சுற்றுலா எந்த அளவுக்கு வளர்ச்சியடையுமோ, அதை விட அதிக சுற்றுலா வளர்ச்சியை, அப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிப்பதன் மூலம் எட்ட முடியும். இதைக் கருத்தில் கொண்டு கோவளம் பகுதியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஹெலிகாப்டர் சுற்றுலாத் திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அத்துடன். கிழக்குக் கடற்கரைச் சாலையை பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழ்விடமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பறவைகள் வாழ்விடமாக அறிவிக்க வேண்டும் கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு கலெக்டர் தடை விதிப்பு: அன்புமணி வரவேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article