பருவமழையின் தீவிர வானிலை நிகழ்வுகளின் காரணமாக இந்தியாவில் 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

3 months ago 26

புதுடெல்லி,

இந்தியாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலம் திங்கட்கிழமை முடிவடைந்தது. இதுவரை 934.8 மிமீ மழை பதிவாகியுள்ளது. சராசரி மழைப்பொழிவை விட இந்த ஆண்டு மத்திய இந்தியாவில் 19 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. தெற்கு இந்தியாவில் 14 சதவீதமும், வடமேற்கு இந்தியாவில் 7 சதவீதமும் வழக்கத்தை விட அதிக மழை பதிவாகியுள்ளது. கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் இயல்பை விட 14 சதவீதம் குறைவான மழை பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் இந்த ஆண்டில் பருவமழை காலத்தில் ஏற்பட்ட தீவிர வானிலை நிகழ்வுகளின் காரணமாக 1,492 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெள்ளம் மற்றும் மழை தொடர்பான சம்பவங்களால் 895 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மழையின்போது இடி மற்றும் மின்னல் தாக்கி 597 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பருவமழையின்போது நாடு 525 கனமழை நிகழ்வுகளை (115.6 மிமீ முதல் 204.5 மிமீ வரை மழைப்பொழிவு) சந்தித்துள்ளது. மேலும் 96 மிக அதிக மழை நிகழ்வுகளை (204.5 மிமீக்கு மேல்) சந்தித்துள்ளது.

கேரளாவில் வெள்ளம் மற்றும் கனமழை காரணமாக 397 பேர் உயிரிழந்துள்ளனர். அசாமில் 102 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 100 பேரும் உயிரிழந்துள்ளனர். தேசிய தலைநகர் டெல்லியில் வெள்ளம் மற்றும் கனமழை காரணமாக 13 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

மழையின்போது இடி, மின்னல் தாக்கியதில் மத்தியப் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் (189) பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் (138), பீகார் (61)மற்றும் ஜார்கண்ட் (53) ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

Read Entire Article