இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதிலுமே பருத்தி ஒரு முக்கிய வணிகப்பயிராக இருக்கிறது. இந்தப் பயிரை அடிப்படையாக வைத்துதான் உலகம் முழுவதுமே பலவகையான வணிகம் நடக்கிறது. அதனாலே, ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பியா உட்பட உலகெங்கும் இந்த பருத்தி பயிரிடப்படுகிறது. இந்த பருத்தியானது இந்தியாவில் மட்டுமே 6 மில்லியன் விவசாயிகளுக்கு நேரடியான வாழ்வாதாரத்தை வழங்குகிறது. உலகளவில் எடுத்துக்கொண்டால் இந்தியாவில் 120.69 லட்சம் எக்டரில் பயிரிடப்பட்டு முதலிடம் வகிக்கிறது. உற்பத்தியிலும் 6.16 மில்லியன் மெட்ரிக் டன் விளைச்சல் செய்யப்படுகிறது. இந்தியாவில் பருத்தி 67 சதவீதம் மானாவாரி பயிராகவும் 33 சதவீதம் பாசன பயிராகவும் பயிரிடப்படுகிறது.அடர் நடவு முறையில் பருத்தியை விதைக்கும்போது இரண்டு விதைகளுக்கு இடையேயான இடைவெளியானது 90 × 15 செ.மீ இருக்க வேண்டும். அப்படி விதைத்தோமென்றால் ஏக்கருக்கு 30,000 செடிகள் வரை வளர்க்க முடியும். அடர் நடவு இல்லாமல் 90 X 30 செ.மீ இடைவெளியில் விதைத்தால் பருத்தி செடியின் எண்ணிக்கை ஏக்கருக்கு 15,000 செடிகள் இருக்கும். அடர் நடவு மற்றும் நெருக்கமான இடைவெளியில் பருத்தி விதைத்தால் போதுமான சூரிய ஒளி சரியான முறையில் பருத்து செடிகளுக்கு கிடைக்கிறது. அதுபோக செடியின் உயரத்தையும் குறைக்கிறது. அதிகப்படியான பயிர் வளர்ச்சியைக் குறைக்கவும், முதன்முதலில் உருவான காய்களை நன்றாக தக்கவைக்கவும் மெபிக்குவாட் குளோரைடு போன்ற தாவர வளர்ச்சி ஊக்கி 2 முதல் 3 முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. அவைகளை கீழே உள்ள அட்டவணையில் பார்க்கலாம்.
தாவர வளர்ச்சி ஊக்கியின் பயன்கள்
* முதல் நிலை அடிப்பக்க காய்களைதக்கவைக்கும்.
* செடியின் உயரம் குறையும்.
* நன்றாக சப்பை பிடித்து, சப்பைகள் உதிராமல் இருக்கும்.
* காய்களின் எடையை அதிகப்படுத்தும்.
* காய் அழுகல் குறைக்கப்படும்.
* மெபிக்வாட் குளோரைடு என்னும் தாவர வளர்ச்சி ஊக்கி,செடியின் உயரம், இலை பரப்பு,தண்டு மற்றும் இடைக்கணு நீளத்தை குறைத்து செடியின் வளர்ச்சியையும் குறைக்கும்.
* தாவரத்தின் வளர்ச்சியை குறைப்பதால் அதிகப்படியான காய்கள் பிடித்து, அதிக மகசூல் பெறும்.
செய்ய வேண்டியவை / செய்ய கூடாதவை
* மெபிக்குவாட் குளோரைடு தெளிப்பை தீர்மானிப்பதற்கு முன், மண்ணில் போதுமான ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
* உயிரியல் மற்றும் உயிரற்ற காரணிகளால் அடிப்பக்க காய்களின் இழப்பு ஏற்பட்டால், மெபிக்குவாட் குளோரைடு அடுத்தடுத்த தெளிப்புகளுக்கு செல்ல வேண்டாம்.
* ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
* மெபிக்குவாட் குளோரைடு தெளிக்கும் பருத்தி வயலில் அடுத்த 30 நாட்கள் வரை எந்த ஆடு மாடுகளையும் மேய்க்கக்கூடாது.
– ப.குமாரவடிவேலு, சங்கரநாராயணன்,
திரு.ச.சுரேஷ்குமார்.
பருத்தி பாதுகாக்க…
உடை, தோள்பை என்று பருத்தி மனிதனின் அன்றாட வாழ்க்கையோடு இனைந்து விடுகிறது. குறைந்த செலவில் அதிக லாபம் தரக்கூடிய பயிர்களில் முதன்மையானது பருத்தி. பருத்திக்கு அதிகம் தண்ணீர் பாய்ச்ச வேண்டிய அவசியமோ, களை எடுக்க வேண்டிய பிரச்சனையோ கூட கிடையாது. இருபது நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினாலே போதுமானது. மாதம் ஒரு முறை நிலத்தில் வளர்ந்து வரும் புற்களை வெட்டி அகற்றினாலே போதும். ஆனால் பருத்தியில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் பிரச்சனை அதிகம் இருக்கும். அசுவினி, வெள்ளை ஈ, தத்துப்பூச்சி என்று பல பூச்சிகள் பருத்தி இலைகளை நீரை உறிஞ்சுகிறது. இதன்மூலம் அதிக மகசூல் கிடைப்பது இல்லை. குறிப்பாக அசுவினி பூச்சிகளின் தாக்குதல் மே முதல் நவம்பர் மாதம் வரை அதிகம் இருக்கும். இந்த பூச்சிகள் இலைகளில் உள்ள பச்சையத்தை உறிஞ்சுவதால் இலைகள் வெள்ளை நிறமாக மாறிவிடும். இந்த அசுவினி பூச்சிகளை கட்டுப்படுத்த வீட்டில் கிடைக்கும் சாம்பலை தேவைக்கு ஏற்ப எடுத்துக் கொண்டு அசுவுனி இருக்கும் செடியில் அனைத்து பாகத்திலும் நன்கு படுமாறு தூவ வேண்டும். அசுவினியை கவர்ந்து அழிக்க ஒரு ஏக்கருக்கு 10 ஊதா நிறமுள்ள ஒட்டுப்பொறி அட்டையை வயலில் 15 அடி இடைவெளிக்கு ஒன்றாக பயிரின் உயரத்தை விட ஒரு அடி உயரம் சேர்த்து கட்டி அசுவினி கவர்ந்து அழிக்கலாம்.
The post பருத்தி வளர்க்க சில யோசனைகள்… appeared first on Dinakaran.