சென்னை,
விஜய் நடித்த 'கத்தி' படத்தின் கதை தன்னுடையது என்று கூறி போராடியவர் கோபி நயினார். அதன் பிறகு 'அறம்' படம் மூலம் கவனம் ஈர்த்தார். முதல் படமே அட்டகாசமாக இருந்ததால் கோபி நயினார் நம்பிக்கைக்குரிய இயக்குநர் என்ற பெயரையும் பெற்றார். இப்போது அவர் நடிகை ஆண்ட்ரியாவை வைத்து 'மனுசி' படத்தை இயக்கியிருக்கிறார். நடிகர் ஜெய்யை வைத்து 'கருப்பர் நகரம்' என்ற படத்தை இயக்கவும் உள்ளார்.
ஹரிஷங்கர், சங்கீதா கல்யாண் நடிப்பில் எழில் பெரியவேடி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பராரி'. இப்படத்திற்கு ஷேன் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை காலா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் நடிகர் ஹரி சங்கர் தயாரித்திருக்கிறார். சமீபத்தில், 'பராரி' திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனத்தை பெற்றுள்ளது. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதற்கிடையில் படத்தை பார்த்த இயக்குநர் கோபி நயினார், படத்தை படக்குழுவினரையும் பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "தோழர் எழில் பெரியவேடி இயக்கிய பராரி திரைப்படம் பார்த்தேன். இந்தியா முழுவதும் உழைக்கும் மக்களான, பல்வேறு பிரிவுகளைக் கொண்ட ஒடுக்கப்பட்ட மக்கள் எப்படி சாதியால் மொழியால் பிளவு பட்டு நிற்கிறார்கள் எனும் சமூக அமைப்பின் துயரத்தை காதலின் வழியே அரசியல் படுத்துகிறது பராரி. திரைப்படங்களில் சாதி பற்றி பேசி வருவது ஆரோக்கியமானதா எனும் கேள்வியும் தொடர்ந்து எழுந்தபடியே இருக்கிறது. இந்திய சமூகம் சாதியால் முரண்பட்டு நிற்கும்போது மொத்த சமூகத்தையும் தன் உயிரென நேசிக்கின்ற கலைஞன் இப்படியான கதைகளையே பேசுவான்.
இத்திரைப்படம் சாதிய பகைகளை கூர் தீட்டாமல்... அந்தப் புண்ணையும் சீழையும் கிளறி கிளறி நாற்றம் அடிக்க செய்யாமல் பேரமைதியின் இதயம் கொண்டு புண்களை தடவுகின்றது. சாதிய புண்கள் ஜனநாயகமாய் குணம் பெறுகிறது. எத்தகைய ஆற்றல் நிறைந்தது மனித பிறப்பு / வாழ்வு / அதன் அறிவியல் உணர்வு. அத்தகைய ஊற்றை சாதியால் மதத்தால் இழந்து நிற்கும் இந்திய சாதி சமூகத்திற்கு இத்திரைப்படம் பெரும் சமூக அரசியல் மற்றும் அறிவியல் பாடம்". மேலும் இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கும் வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.