பரப்பளவை அளவீடு செய்வதில் சுணக்கம், மணலி கடப்பாக்கம் ஏரியை புனரமைக்கும் பணி தாமதம்: விரைந்து முடிக்க கோரிக்கை

3 weeks ago 6

திருவொற்றியூர்: மணலி மண்டலம், 16வது வார்டில் கடப்பாக்கம் ஏரி, சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மழைக்காலத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர் இந்த ஏரியில் சேமிக்கப்பட்டு, நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்குகிறது. மணலி, வெள்ளாங்குளம், அம்மன் குளம், அரியலூர், கன்னியம்மன்பேட்டை, காமராஜபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் இந்த ஏரி நீரை பயன்படுத்தி வாழை, நெல், விளாம்பழம், கீரை போன்ற விவசாயம் செய்து வருகின்றனர். கால்நடைகளுக்கும் நீர் ஆதாரமாக விளங்குகிறது. பல ஆண்டு காலமாக முறையாக பராமரிக்காததால் தற்போது இந்த ஏரி முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்து தூர்ந்துள்ளது. இதனால் மழைக்காலத்தில் ஏரியில் தண்ணீர் சேமிக்க முடியாமல் வீணாக வெளியேறி, சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விடுகிறது.

இதனால் பயிர்கள் நாசமாகி விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். எனவே, இந்த ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்பேரில், மாநகராட்சி சார்பில் ஆசிய வளர்ச்சி வங்கியின், உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி மானிய நிதி ₹46 கோடி மதிப்பீட்டில் இந்த ஏரியை சீரமைக்கும் பணிகளை, கடந்த 12.8.2024 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, கடப்பாக்கம் ஏரியை தூர்வாரி, ஆழப்படுத்தி, அகலப்படுத்தி, கரையை உயர்த்தி, சுற்றிலும் நடைபாதை, சைக்கிள் ஓடுதளம், அலங்கார விளக்குகள், இருக்கைகள் அழகிய மரம், செடிகள் மற்றும் சிறுவர் பூங்கா உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த ஏரியை புனரமைப்பதன் மூலம், சராசரியாக 2.2 மில்லியன் கன மீட்டர் அளவிற்கு நீர் தேக்கம் அதிகரிப்பதோடு, சுற்றுச்சூழல் மேம்படும், சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் தேங்கி விவசாயம் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும், விவசாயத்திற்கு சீரான பாசன வசதி கிடைக்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பருவமழை தொடங்குவதற்கு முன் இந்த ஏரியை தூர்வாரும் பணியை துரிதப்படுத்த மாநகராட்சி திட்டமிட்டது. இதற்காக ஏரியின் சுற்றளவை அளவீடு செய்து அறிக்கை அளிக்கும்படி திருவொற்றியூர் தாசில்தாரிடம் மனு செய்யப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களை கூறி ஏரியின் சுற்றளவை அளவீடு செய்யாமல் காலம் கடத்துவதால் ஏரியை அகலப்படுத்தும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்து, ஏரி புனரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பரப்பளவை அளவீடு செய்வதில் சுணக்கம், மணலி கடப்பாக்கம் ஏரியை புனரமைக்கும் பணி தாமதம்: விரைந்து முடிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article