ராஞ்சி,
ஜார்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதற்கட்ட தேர்தல் 14ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் 20ம் தேதியும் நடைபெற்றது. ஜார்கண்டில் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணியும், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் மோதின.
ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் மொத்தம் 1,211 வேட்பாளர்களாக களமிறங்கினர். இத்தேர்தலில் 67.74 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், ஜார்கண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
ஜார்க்கண்டில் தற்போது எண்ணப்பட்டு வரும் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 42 தொகுதிகள் தேவையாகும்.
முன்னதாக பா.ஜ.க கூட்டணி முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இதுவரை 81 தொகுதிகளில் முன்னிலை நிலவரம் வெளியாகி உள்ளது.
இதன்படி காங்கிரஸ் கூட்டணி 49 இடங்களிலும், பா.ஜ.க கூட்டணி 30 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. சுயேட்சைகள் மற்றும் இதர கட்சிகள் 2 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன.