
சென்னை,
காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்காக பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து 5,183 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
இந்த நிலங்கள் விளை நிலங்களாகவும், ஏரி, குளங்களாகவும் இருப்பதால் இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராடி வருகின்றனர். இதையடுத்து தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு தேவைப்படுவதால் மக்களை பாதிக்காத வகையில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இந்த நிலையில், பரந்தூர் விமான நிலையம் விண்ணப்ப பரிசீலனை தொடர்பாக டெல்லியில் சிறப்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திட்டம் தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு தமிழக தொழில் துறை அதிகாரிகள் விளக்க உள்ளனர். கொள்கை அளவில் ஒப்புதல் பெறுவதற்கான விண்ணப்பத்தை டிட்கோ நிறுவனம் சமர்ப்பித்துள்ளது. திட்டம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளுடன் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு, மேலாண்மை திட்டத்தை தயார் செய்வதற்கான ஆய்வு எல்லைகளை வகுத்து அனுமதி வழங்கப்பட உள்ளது.