பரந்தூர் விமான நிலையத்துக்கு மாற்று இடத்தை விஜய் கூற வேண்டும் - அண்ணாமலை

2 weeks ago 3

சென்னை,

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடி வரும் மக்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, நான் வளர்ச்சிக்கு எதிரானவர் அல்ல என்றும், விவசாய நிலங்களைத் தவிர்த்து வேறு இடத்தில் விமான நிலையத்தை அரசு அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்தநிலையில்,  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

பரந்தூர் என்ற இடத்தை மத்திய அரசு தேர்வு செய்யவில்லை, மாநில அரசு அளித்த பட்டியலில் பரந்தூர் இருந்தது. பிரச்சினை இருக்கிறது என்றால் சகோதரர் விஜய் ஆக்கப்பூர்வமான யோசனை தெரிவிக்க வேண்டும். பெங்களூரு விரைவுச் சாலை அருகிலேயே பரந்தூர் வருகிறது. வேறு இடம் உங்களுக்கு தெரிந்தால் அதனை சொல்ல வேண்டும். எல்லாத்தையும் எதிர்க்கக் கூடிய மாநிலமாக தமிழகம் மாறிவிட்டால், எவ்வாறு ஒரு டிரில்லியன் பொருளாதார மாநிலமாக மாற முடியும்.

விவசாய நிலங்கள், பறவைகள் சரணாலயங்கள் இருப்பதாக பரந்தூர் மக்கள் சொல்லும் கருத்துகள் நியாயமானவைதான். மாநில அரசு இந்த இடத்தை தேர்வு செய்தபோது இதனை கவனித்திருக்க வேண்டும். அதிமுக, திமுக இரு கட்சிகளும் ஆட்சியில் இருக்கும்போது பரந்தூரை பரிந்துரைத்துள்ளன. மாநில அரசு கொடுத்த பட்டியலில் இடத்தை தேர்வு செய்தது மட்டுமே மத்திய அரசின் வேலை.

ஆனால், சென்னைக்கு கட்டாயம் விமான நிலையம் தேவை. தற்போதைய சூழலில் 2.5 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்ட சென்னை விமான நிலையம் போதுமானது இல்லை. அடுத்த 10 ஆண்டுகளில் 10 கோடி பயணிகளை கையாளும் விதமாக விரிவாக்கம் செய்ய வேண்டும். ஆயிரம் ஏக்கரின் இதனைச் செய்ய முடியாது. டெல்லி, ஐதராபாத்தில் 5,000 ஏக்கரும், பெங்களூருவில் 4,000 ஏக்கரும் உள்ளதால், அனைத்தும் அங்கு சென்றுவிடும். தமிழகம் எப்படி வளரும்? என கேள்வி எழுப்பினார்.

Read Entire Article