பயிர்களைக் காக்கும் உயிர்வேலி!

3 months ago 24

இயற்கை முறை விவசாயம்தான். ஆனால் அதிக விலை கொடுத்து இயற்கை உரங்களையோ, பூச்சிவிரட்டிகளையோ வாங்கிப் பயன்படுத்துவது இல்லை. இருந்தபோதும் நல்ல விளைச்சல் எடுக்கிறார் கணேஷ் பிரணவ். இதற்கு இவர் கையாளும் சில எளிமையான யுக்திகள்தான் காரணம். இவர் தனது வயலைச் சுற்றி அமைத்திருக்கும் உயிர் வேலி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. காஞ்சிபுரம் மாவட்டமும், திருவள்ளூர் மாவட்டமும் இணையும் எல்லைப்பகுதியான புதுப்பட்டு என்கிற கிராமத்தில்தான் அமைந்திருக்கிறது கணேஷ் பிரணவின் இந்த இயற்கை வயல். சுற்றிலும் ஏரிகள், தாங்கல், வாய்க்கால் என நீர்நிலைகள் நிரம்பிய இந்தப் பகுதிக்கு காஞ்சிபுரத்தில் இருந்து கண்ணன் தாங்கல் வழியாகவும், சுங்குவார்சத்திரம் வழியாகவும் செல்லலாம். செல்லும் வழி எல்லாமே பசுமை நிரம்பிய சோலைகள்தான். ஒரு பகல்பொழுதில் வெயிலை தோற்கடித்து குளிர்க்காற்று வீசிய தருணத்தில் கணேஷ் பிரணவைச் சந்தித்தோம்.

“ அப்பா நல்ல விவசாயி. கடைசி காலத்தில் அவருக்கு 2 கிட்னிகளும் பெயிலியர். 6 ஆண்டுகள் படாத பாடு பட்டார். நான் சென்னையில் வேறு தொழில் செய்து வந்தேன். அப்பாவுடன் ஊரில் இருக்க வேண்டி இருந்ததால் விவசாயத்தையும் பார்க்க வேண்டி இருந்தது. நெல், மணிலா என செய்தால் பராமரிப்புக்காக அலைய வேண்டியிருக்கும் என நினைத்து சவுக்கு பயிரிட்டோம். அப்போது சவுக்கில் இருந்து உதிர்ந்து விழும் சருகுகளால் நிலம் நன்றாக வளமாக மாறியது. இடையில் அப்பா இறந்துவிட்டார். சவுக்கை வெட்டி விற்று விட்டு மணிலா பயிரிட்டோம். அப்போது வேலி எல்லாம் இல்லை. பன்றித்தொல்லை அதிகமாக இருந்தது. இதனால் மீண்டும் நெல் விவசாயத்திற்கு வந்துவிட்டோம். நம்மாழ்வார் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு தற்சார்பு விவசாயம் செய்வது என முடிவெடுத்தேன். நமக்கு எளிமையாகக் கிடைக்கும் பொருட்களை வைத்தே பயிர் செய்ய வேண்டும் என முடிவெடுத்து அதன்படி நெல் பயிரிடுகிறேன்.’’நம்மிடம் பேசிக்கொண்டே வயலைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள உயிர்வேலியை நமக்கு காண்பித்த கணேஷ், அதுகுறித்தும் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

“ பயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக உயிர்வேலி அமைத்தேன். இதை ஒரே நாளில் அமைக்க முடியாது. பல கட்டங்களாக அமைத்து இப்போது 90 சதவீதம் பாதுகாப்பான உயிர்வேலியாக மாறி இருக்கிறது. எங்களது நிலத்தின் இரண்டு பகுதிகள், பக்கத்து வயல்களை ஒட்டி அமைந்திருக்கிறது. அவர்களுக்கு முட்கள் தொந்தரவு இருக்கக்கூடாது என்பதற்காக ஒதியன், மருதாணி, கிளைரிசிடியா, கிளுவை ஆகிய வேலிப்பயிர்களை நட்டிருக்கிறேன். மற்ற 2 பகுதிகள் நீர்நிலைகளை ஒட்டி அமைந்திருக்கின்றன. ஒரு பகுதி கம்பன் கால்வாயையும், மற்றொரு பகுதி அனுமந்தை ஏரியின் கலங்கல் வாய்க்காலையும் ஒட்டி அமைந்திருக்கின்றன. அந்தப் பகுதிகளில் மேற்கூறிய 4 பயிர்களோடு சப்பாத்திக்கள்ளி, சதுரக்கள்ளி, கற்றாழை, சூடான் முள் ஆகியவற்றையும் நட்டு வளர்க்கிறேன். இவை இப்போது நன்றாக வளர்ந்து வயலுக்கு அரணாக மாறி இருக்கின்றன. இருந்தபோதும் முயல் உள்ளிட்ட சிறு விலங்குகள் உள்ளே நுழைகின்றன. அதற்காக உள்பக்கமாக மீன் வலை கட்டி இருக்கிறேன். மேலும் சில உயிர்வேலிப் பயிர்களை நட இருக்கிறேன். அவை வளர்ந்து முழுமையான வேலியாக மாறிவிடும்.

இந்த உயிர்வேலி பல்வேறு வகைகளில் பயனுள்ளதாக இருக்கிறது. காற்றுத்தடுப்பானாகவும், வெள்ளத்தடுப்பானாகவும், மண் அரிப்புத் தடுப்பானாகவும் இது சிறப்பாக செயல்படுகிறது. தட்பவெப்ப நிலையை சீராக வைத்திருக்கிறது. இதில் ஒரு வித்திலை, இரு வித்திலை தாவரங்கள் கலந்திருக்கின்றன. இவற்றின் வேர் முடிச்சுகளில் வாழும் நுண்ணுயிர்கள், மண் ஈரமாக இருக்கும்போது நிலத்திற்குள் பரவி ஈரத்தைப் பரவல் ஆக்குகின்றன. வறட்சிக் காலங்களில் கூட ஈரத்தை தக்க வைக்கின்றன. உயிர்வேலியின் மற்றொரு சிறப்பம்சம் பயோடைவர்சிட்டியை (பல்லுயிர்ப் பெருக்கம்) நிலைநிறுத்துவது. இதில் சில அசைவ உயிரிகள் வாழ ஆரம்பிக்கும். அவை சைவ உயிரிகளான தாவரங்களை அழிக்கும் பூச்சி, வண்டுகளை அழிக்கும் வல்லமை கொண்டவை. இதுபோன்ற அம்சங்கள் பயிர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதோடு, பயிர் வளமாக வளரவும் உதவிபுரிகின்றன. உயிர்வேலிப் பயிர்களில் சில பயிர்கள் தீவனமாக விளங்குவதால் கால்நடைகளுக்கு அவற்றைப் பயன்படுத்தலாம். இதை கமர்ஷியலாகவும் விற்பனையும் செய்யலாம்’’ என உயிர்வேலியின் சிறப்பம்சங்களைப் பட்டியலிட்ட கணேஷ், தனது நெல் விவசாயம் குறித்தும் பேசினார்.

“ நான் இந்த நிலத்தில் சம்பா, சொர்ணமசூரி என 2 போகம் நெல் பயிரிடுகிறேன். சம்பா போகத்தில் மைசூர் மல்லி, தூயமல்லி உள்ளிட்ட பாரம்பரிய ரக நெற்பயிர்களை நடுவேன். சொர்ணமசூரி போகத்தில் கோ 55 போன்ற பல்கலைக்கழக ரகங்களைப் பயிரிடுவேன். இப்போது 6 ஏக்கரிலும் கோ 55 பயிரிட்டு இருக்கிறேன். இவை அறுவடைக்கு தயார் நிலையில் இருக்கின்றன. விதைகளை மார்க்கர் கருவி மூலம் 24 செ.மீ அளவுகளில் 4 மூலைகளில் மார்க்கிங் செய்து ஒற்றை நாற்றாக நடுகிறேன். மாடுகளின் கழிவுகள் மூலம் ஜீவாமிர்தம், பஞ்சகவ்யம் மற்றும் மீன் அமிலம் தயார் செய்து பாசன நீரில் பயிர்களுக்குக் கொடுப்பேன். உயிர்வேலி இருப்பதால் பூச்சிகளின் தொல்லை குறைவாகவே இருக்கும். பூச்சித்தொல்லை இருந்தால் பத்திலை கசாயம், 3 ஜி (இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு) கரைசல் தெளிப்பேன். 115 நாளில் அறுவடை நடக்கும். ஏக்கருக்கு 25 மூட்டை மகசூல் கிடைக்கும். அவற்றை அரிசியாக்கி வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்கிறேன். இதன்மூலம் ஏக்கருக்கு 60 ஆயிரம் லாபம் கிடைக்கிறது’’ என நிறைவாக பேசி முடித்தார்.
தொடர்புக்கு:
கணேஷ் பிரணவ்: 98407 23336.

The post பயிர்களைக் காக்கும் உயிர்வேலி! appeared first on Dinakaran.

Read Entire Article