
பெங்களூரு,
காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் சிவமொக்காவை சேர்ந்த மஞ்சுநாத் ராவ் உயிரிழந்தார். அவரது மனைவி பல்லவியும், மகன் அபய்ஜெயனும் உயிர் தப்பினர். இந்த நிலையில், மஞ்சுநாத் ராவின் மகன் அபய்ஜெயனை முஸ்லிம் வாலிபர்கள் 2 பேர் காப்பாற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது, 18 வயது நிரம்பிய அபய்ஜெயனையும் பயங்கரவாதிகள் கொல்ல முயன்றுள்ளனர். அப்போது உள்ளூரை சேர்ந்த முஸ்லிம் வாலிபர்கள், அவரை தோளில் சுமந்து சென்று பயங்கரவாதிகளிடம் இருந்து காப்பாற்றி பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதுபற்றி மஞ்சுநாத் ராவின் மகன் அபய்ஜெயன் கூறுகையில், 'சம்பவம் நடந்த தினத்தில் நான் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தேன். அம்மாவும், அப்பாவும் எனக்கு ஏதாவது சாப்பிட வாங்க சென்றனர். என்னை அங்கேயே இருக்க சொன்னார்கள். நான் இருந்த இடத்தில் துப்பாக்கி சத்தம் கேட்டது. ஏதோ பட்டாசு வெடிப்பார்கள் என நினைத்தேன். சிறிது நேரத்தில் அனைவரும் ஓட தொடங்கினர். எனது அம்மாவும் வந்து என்னை இழுத்து கொண்டு ஓடினார். அப்போது தான் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடுவது தெரிந்தது. நாங்கள் அங்கிருந்து ஓடினோம். அப்பா எங்கே? என்று கேட்டேன். மேலும் திரும்பி பார்த்தபோது எனது தந்தை துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டிருந்தார். அந்த நேரத்தில் உள்ளூர் காஷ்மீரிகள் 2 பேர் எங்களை காப்பாற்றினர். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்க சென்றோம். இப்படி நரகமாகும் என நினைக்கவில்லை' என்றார்.