பயங்கரவாத தாக்குதலில் நூலிழையில் உயிர் தப்பிய பெங்களூரு ஊழியர்கள் பரபரப்பு தகவல்கள்

5 hours ago 3

பெங்களூரு,

ஐஸ்கிரீம் சாப்பிட நின்றதால் பயங்கரவாத தாக்குதலில் இருந்து பெங்களூருவை சேர்ந்த 17 ஊழியர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ள பரபரப்பு தகவல்கள் தெரியவந்துள்ளது.

காஷ்மீரின் பஹல்காமில் பைசரன் என்ற சுற்றுலா தலத்தில் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கர்நாடகத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பைசரன் பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த கர்நாடகத்தை சேர்ந்த பலர் இந்த தாக்குதலில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய தகவல் வெளியாகி இருக்கிறது.

அதன்படி பெங்களூருவில் உள்ள நியூதிப்பசந்திரா லே-அவுட்டை சேர்ந்த சுமனா பட் உள்பட 17 பேர் கொண்ட குழுவினர் தான் பயங்கரவாத தாக்குதலில் இருந்து உயிர் தப்பியுள்ளனர். இவர்கள் பெங்களூருவில் டைம்ஸ் என்ற நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள். கோடைவிடுமுறையை கொண்டாட காஷ்மீருக்கு அவர்கள் கடந்த 5 நாட்களுக்கு முன்பு சென்றுள்ளனர்.

இதுகுறித்து சுமனா பட் கூறுகையில், நாங்கள் 17 பேர் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ளோம். நாங்கள் பயங்கரவாத தாக்குதல் நடந்த பைசரன் பகுதிக்கு குதிரைகளில் சவாரி செய்து சென்று கொண்டிருந்தோம். பைசரன் பகுதி புல்வெளிகள், மலைத்தொடர் என அழகாக இருக்கும் என்று சுற்றுலா வழிகாட்டிகள் கூறினர். அதனால் நாங்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தோம். வழியில் எங்கள் குழுவினர் ஐஸ்கிரீம் சாப்பிட ஒரு கடையில் நின்றோம். பைசரன் பகுதியில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் முன்பு நாங்கள் நின்றிருந்தோம்.

அந்த சமயத்தில் தான் பைசரன் புல்வெளி பகுதிக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாங்கள் ஐஸ்கிரீம் சாப்பிட நிற்கவில்லை என்றால், பயங்கரவாத தாக்குதலில் நாங்களும் சிக்கி இருப்போம். அதிர்ஷ்டவசமாக நாங்கள் அங்கு செல்லாததால் நூலிழையில் உயிர் தப்பியுள்ளோம்.

சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்ட தகவலை குதிரைகாரர்கள் எங்களிடம் சொல்லி அனைவரும் திரும்பிச் செல்லுமாறு கூறினர். அதனால் நாங்கள் பதறியடித்தப்படி பஹல்காமில் உள்ள நாங்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு நடந்தே சென்றோம். பஹல்காம் பகுதியில் அசாதாரண சூழல் நிலவியதால் நாங்கள் எங்கள் உடைமைகளை இந்திய ராணுவ வாகனங்களில் எடுத்துக்கொண்டு ஜம்முவுக்கு வந்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article