ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே, பனப்பாக்கம் கிராமத்தில் புதர் மண்டி காணப்படும் சிறுவர் பூங்காவை சீரமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரிபாளையம் அருகே, எல்லாபுரம் ஒன்றியம், பனப்பாக்கம் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தைச் சுற்றியுள்ள இளைஞர்கள் பயன்பாட்டிற்காக, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சிதுறை சார்பில் கடந்த 2016-2017ம் ஆண்டு தாய் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் செலவில் அம்மா உடற்பயிற்சி கூடம் மற்றும் சிறுவர் பூங்கா அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, கட்டிடம் கட்டி முடித்த பின்பும் 3 ஆண்டுகளாக திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக கிடந்தது. பின்னர் அம்மா உடற்பயிற்சி கூடமும், சிறுவர் பூங்காவும் திறக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த சிறுவர் பூங்காவைச் சுற்றி செடி, கொடிகள் படர்ந்து புதர் மண்டிக்கிடப்பதால், பாம்பு மற்றும் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், இந்த பூங்காவில் விளையாட வரும் சிறுவர்கள் அச்சமடைந்து பூங்காவிற்கு வருவதை முற்றிலுமாக தவிர்த்துள்ளனர். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையால், பூங்கா முழுவதும் மழைநீர் தேங்கி நிற்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூங்காவில் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்றவும், புதர் போல் வளர்ந்துள்ள புற்களை அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post பனப்பாக்கம் கிராமத்தில் புதர்மண்டி காணப்படும் சிறுவர் பூங்கா: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.