பந்துவீச்சாளர்களை பாராட்டிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ்

2 hours ago 1

கொல்கத்தா,

பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி கொல்கத்தாவில் நேற்று இரவு நடந்தது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிலிப் சால்ட் மற்றும் பென் டக்கெட் ஆகியோர் களமிறங்கினர். இதில் பிலிப் சால்ட் ரன் ஏதுமின்றி அவுட் ஆகி வெளியேறினார். பென் டக்கெட் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கேப்டன் ஜாஸ் பட்லர் நிலைத்து நின்று அரை சதம் கடந்தார். ஆனால் மறுமுனையில் மளமளவென விக்கெட்டுகள் சரிந்தன. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி தடுமாறியது. அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 68 ரன்களும், ஹாரி புரூக் 17 ரன்களும் எடுத்தனர். இது தவிர ஜாக்கோப் பெத்தேல் (7), ஜேமி ஓவர்டன்(2), கஸ் அட்கின்சன்(2) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 133 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது.தொடக்க வீரர்களாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் , அபிஷேக் சர்மா இருவரும் அதிரடியாக விளையாடினர். அதில் சஞ்சு சாம்சன் 26 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மறுபுறம் அபிஷேக் சர்மா பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டார் .

சிறப்பாக விளையாடி அரை சதமடித்த அவர் 79 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து திலக் வர்மா அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். இதனால் இந்திய அணி 12.5 ஓவர்களில் 3 விக்கெட் டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்தது .இதனால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. திலக் வர்மா 19 ரன்னுடனும், ஹர்திக் பாண்ட்யா 3 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்த போட்டியில் வருண் சக்ரவர்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நாளை மறுதினம் (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது.

இந்நிலையில் இந்திய அணியின் வெற்றிக்கு பந்துவீச்சாளர்களை கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாராட்டி உள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், "இந்திய வீரர்கள் அனைவரும், மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டனர். முதல் பந்தில் இருந்தே, அவர்களது சுறுசுறுப்பு எனக்கு புத்துணர்ச்சியை கொடுத்தது. இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் எங்கள் பந்துவீச்சாளர்கள் களத்தில் தங்களது திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தினார்கள்.

வருண் சக்ரவர்த்தி, களநிலவரம் அறிந்து சிறப்பாக பந்துவீசினார். எந்த நேரத்தில் எப்படி பந்துவீச வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரிந்திருக்கிறது. அர்ஷ்தீப் சிங், பொறுப்பை உணர்ந்து பந்துவீசுகிறார். இந்த இருவரும் முதல் 5 பேட்டர்களை வீழ்த்தி அசத்தியது, வெற்றிக்கு மிகமிக்கிய காரணம். ஹர்திக் பாண்ட்யா புதிய பந்தில் பந்துவீசுவதால், எனக்கு கூடுதலாக ஒரு ஸ்பின்னருடன் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. கவுதம் கம்பீர் எங்களுக்கு நிறைய சுதந்திரத்தை கொடுத்துள்ளார். 2024 டி20 உலக கோப்பையில் விளையாடியதை விட சற்று வித்தியாசமாக விளையாட விரும்புகிறோம்" என்று சூர்யகுமார் யாதவ் கூறினார்.

அர்ஷ்தீப்சிங் சாதனை

இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்சிங் இந்த ஆட்டத்தில் 2 விக்கெட் வீழ்த்தினார். இதையும் சேர்த்து அவரது விக்கெட் எண்ணிக்கை 97-ஆக (61 ஆட்டம்) உயர்ந்தது. இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர் என்ற சாதனையை சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலிடம் (96 விக்கெட்) இருந்து கைப்பற்றினார்.

'மெகா' வெற்றி

இந்திய அணி 43 பந்துகள் மீதம் வைத்து இலக்கை விரட்டிப்பிடித்தது. இந்த வகையில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் 'மெகா' வெற்றி இதுவாகும். இதற்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிராக 13 பந்துகள் மீதம் வைத்து இலக்கை எட்டியதே இந்தியாவின் சிறந்த வெற்றியாக இருந்தது.

Read Entire Article