* சிக்கலை தீர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை
உலகளவில், 15 முதல் 19 வயதுக்குட்பட்ட சுமார் 16 மில்லியன் சிறுமிகளும், 15 வயதுக்குட்பட்ட இரண்டு மில்லியன் சிறுமிகளும் ஒவ்வொரு ஆண்டும் கர்ப்பமடைகின்றனர்
சென்னை: தமிழகத்தில் பதின்ம வயதில் கர்ப்பம் அடைவது உயர்ந்து வருவதாக பொது சுகாதாரத்துறை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. பெண்கள் இளம் வயதில் கருத்தரித்தாலும், வயது கடந்து கருத்தரித்தாலும் பிரச்னையை எதிர்கொள்ள நேரிடும். இளம் வயதில் திருமணம், பருவ பெண்கள் எதிர்பாராத கர்ப்பம் என்று எப்படி கொண்டிருந்தாலும் இது கவலைதரக் கூடிய விஷயமே. பதின்ம வயதில் கருத்தரிக்கும் போது பிரசவத்தில் ஆபத்தை கொண்டிருக்கிறது. பொதுவாக பெண்கள் 19 வயதுக்குள் கருத்தரிக்கும் போது அதனை பதின்ம வயது கர்ப்பம் என தெரிவிப்பர். உலகளவில், 15 முதல் 19 வயதுக்குட்பட்ட சுமார் 16 மில்லியன் சிறுமிகளும், 15 வயதுக்குட்பட்ட இரண்டு மில்லியன் சிறுமிகளும் ஒவ்வொரு ஆண்டும் கர்ப்பமடைகின்றனர்.
இந்தியாவில் 4 பெண்களில் ஒருவர் 18 வயதுக்கு முன் திருமணம் செய்து கொண்டவர்களாகவும், 15 முதல் 19 வயதுடைய பெண்களில் 7.8 சதவீதம் பேர் கர்ப்பமாக அல்லது தாய்மார்களாக இருக்கிறார்கள் என தேசிய குடும்ப நல ஆய்வு மேற்கொண்டதில் தெரியவந்துள்ளது. அதேபோல தமிழகத்தில் 2015 -2016ம் ஆண்டு 5 சதவீதமாக இருந்தது, அது 2019 -2020ம் ஆண்டு 6.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும் பல ஆரோக்கிய விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது, இருப்பினும் தமிழகத்தில் பதின்ம வயதில் கர்ப்பம் அடைவது கடந்த சில ஆண்டுகளாக உயர்ந்து வருகிறது என பொது சுகாதாரத்துறை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை இணையதளத்தில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2024ம் ஆண்டு மார்ச் மாதம் வரை 49,93,093 கர்ப்பிணிகள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் வயது வாரியாக பிரிக்கப்பட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மொத்தம் 62,870 பேர் பதின்ம வயதில் கர்ப்பம் அடைந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக சேலம் மற்றும் மதுரையில் 3,000க்கும் மேற்பட்டவர்கள் இளம்வயதில் கர்ப்பம் அடைந்துள்ளனர். காஞ்சிபுரம், சிவகங்கை, விருதுநகர், நாகர்கோவில், சென்னை போன்ற மாவட்டத்தில் இதன் சதவீதம் குறைவாக உள்ளது. மேலும் தமிழகத்தில் 2019ம் ஆண்டு பதின்ம வயதில் கர்ப்பம் அடைந்தவர்கள் சதவீதம் 1.1 ஆக இருந்தது. அது 2024ம் ஆண்டுபடி 1.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பதின்ம வயது கர்ப்பத்திற்கு ஆரம்பகால திருமணம், சமூகம் மற்றும் சமூக அழுத்தம், பாலியல் துஷ்பிரயோகம், வன்முறை மற்றும் விழிப்புணர்வு இல்லாதது என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே இந்த சிக்கலை விரிவாக தீர்க்க, ஒரு பல்முனை அணுகுமுறை தேவை எனவும் மாணவர்களுக்கு பாலியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பதின்ம வயது கர்ப்பத்தால் ஏற்படும் பிரச்னைகள்
இளம் வயதில் கர்ப்பப்பை முழு வளர்ச்சி அடைந்திருக்காது. இதனால் குழந்தை குறைப்பிரசவம் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கர்ப்பப்பை பக்குவமடைந்திருக்காது. அதனால் கர்ப்பப்பையில் இருக்கும் நஞ்சுக்கொடி (Placenta) ஒழுங்காக ஒட்டாமல் இருக்கும். பனிக்குடத்தில் போதுமான அளவு நீர் இருக்காது. அத்துடன் கர்ப்பப்பை சுருங்கி, சுருங்கி விரியும் தன்மையையும் இழந்துவிடும். கருவுற்றிருக்கும் போதும், குழந்தை பிறந்த பிறகும், தாய்க்கு அதிக ரத்தப்போக்கு ஏற்படும். பிரசவத்தின் போது நஞ்சுக்கொடி வெளியே வரமுடியாத நிலை கூட ஏற்பட்டு, தாய் உயிரிழக்க நேரும் என மருத்துவர்கள் தெரிவிகின்றனர்.
The post பதின்ம வயதில் கர்ப்பம் அடைவது உயர்ந்து வருகிறது: பொது சுகாதாரத்துறை ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.