பண்டிகைகளை ஜொலிக்க வைக்கும் சிவகாசி பட்டாசுக்கு புவிசார் குறியீடு கிடைக்குமா: உற்பத்தியாளர்கள்; தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

1 day ago 5

சிவகாசி: நாட்டின் மொத்த தேவையில் 95 சதவீதத்தை பூர்த்தி செய்யும் சிவகாசி பட்டாசுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என, தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை மனு அளித்துள்ளது. புவிசார் குறியீடு (ஜியோகிராபிக்கல் இண்டிகேஷன்) என்பது ஒரு பொருளுக்கு வழங்கப்படும் அறிவுசார் சொத்து உரிமையாகும். வேளாண், உணவுப் பொருள்கள், கைவினைப் பொருள்கள் உற்பத்தி சார்ந்த பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 69 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று இந்திய மாநிலங்களில் 2ம் இடத்தில் உள்ளது. இந்நிலையில், சிவகாசி பட்டாசுக்கு ‘புவிசார் குறியீடு’ வழங்கக் கோரி, புவிசார் குறியீடு பதிவுத்துறைக்கு தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் மனு அளித்துள்ளது.

பட்டாசு என்றாலே சிவகாசி தான்…
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி குட்டி ஜப்பான் என அழைக்கப்படுகிறது. சிவகாசி அதன் சுற்றுவட்டாரங்களில் பட்டாசு தயாரிப்பு முக்கிய தொழிலாக திகழ்கிறது. இப்பகுதியில் மட்டும் 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் 8 லட்சம் தொழிலாளர்கள் நேரடி வேலைவாய்ப்பு பெறுகின்றனர். நாடு முழுவதும் ஒரு கோடி பேர் மறைமுக வேலை வாய்ப்பு பெறுகின்றனர். நமது நாட்டுக்கு தேவையான பட்டாசுகளில் 95 சதவீதம் சிவகாசியில் தான் தயாரிக்கப்படுகிறது. நாடு முழுவதும் வாழும் மக்களின் மகிழ்ச்சிக்காக ஆண்டு முழுவதும் உழைக்கும் பட்டாசுத் தொழிலாளர்களை கௌரவப்படுத்தும் வகையில் சிவகாசி பட்டாசுகளுக்கு ‘புவிசார் குறியீடு’ வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

போலிகளை தடுக்க உதவும்…
இது குறித்து சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர் சன்சைன் கணேசன் கூறுகையில், சிவகாசி பட்டாசுக்கு புவிசார் குறியீடு கிடைக்கும் பட்சத்தில் நகர் பெருமை அடையும். தொழிலாளர்கள், உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைவர். பட்டாசு தொழில் வளர்ச்சிப் பாதைக்கு செல்லும். ஏற்றுமதிக்கு வழிவகுக்கும். பட்டாசு தொழிலுக்கு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். சந்தையில் போலி பட்டாசுகளைத் தடுக்க உதவும்’ என்றார்.

மாணிக்கம் தாகூர் எம்பி எக்ஸ் தள பதிவு…
சிவகாசி பட்டாசுக்கு புவிசார் குறியீடு, சிவகாசியின் பெருமைக்கு பெருமை சேர்க்கும். பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபடும் தொழிலாளர்களின் கைவினை திறனுக்கும், நமது பண்பாட்டிற்கும் கிடைக்கும் மிகப்பெரிய கௌரவம் ஆகும் இது. இதன்மூலம் நமது பாரம்பரியம் மிக்க ஒளி மிகுந்த பண்டிகைகளை, விழாக்களை இன்னும் மகிழ் வாழ்வாய் கொண்டாடுவோம். இதன்மூலம் பாரம்பரியத்தை பாதுகாப்போம்.

புவிசார் குறியீடு பெற்ற தமிழக பொருட்கள்
தமிழகத்தில் காஞ்சிபுரம் பட்டு, தஞ்சாவூர் கலைத்தட்டு, மதுரை மல்லி, சேலம் மாம்பழம், தஞ்சை பாணி ஓவியபட்டு, பழனி பஞ்சாமிர்தம், கோவில்பட்டி கடலை மிட்டாய், திருநெல்வேலி அல்வா, ஆத்தங்குடி டைல்ஸ், திண்டுக்கல் பூட்டு, ஆம்பூர் பிரியாணி, மார்த்தாண்டம் தேன், கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலை, விருதுநகர் சம்பா வத்தல், வில்லிப்புத்தூர் பால்கோவா உள்ளிட்ட பல பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

The post பண்டிகைகளை ஜொலிக்க வைக்கும் சிவகாசி பட்டாசுக்கு புவிசார் குறியீடு கிடைக்குமா: உற்பத்தியாளர்கள்; தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article