‘விடுமுறை’ என்றாலே பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் அலுவலகம் செல்லும் பெரியவர்கள் வரை குதூகலம் அடைவதுண்டு. குழந்தைகளோ ‘ஹையா லீவு ஜாலி’ என்று உற்சாகம் கொள்வார்கள். ‘அப்பாடா’ இன்னிக்கு லீவு. காலையிலே எழுந்திருக்க வேண்டியதில்லை. நெடுநேரம் தூங்கலாம் என்று பெரியவர்கள் நினைப்பதுண்டு. இதோ பண்டிகை கால விடுமுறைகள் படையெடுக்கும் தருணம். பலரும் இப்போதே சொந்த ஊர்களுக்குச் செல்ல ரயில், பேருந்து டிக்கெட்டுகள் என பதிவு செய்து காத்திருப்பார்கள். இப்போதிலிருந்து பொங்கல் வரையிலும் தொடர்ந்து ஏதேனும் விழாக்கள், விடுமுறைகள் வரும். உடன் பள்ளிகளுக்கு காலாண்டுத் தேர்வுகள் முடிந்து ஒரு வார விடுமுறையும் வரும் என்பதால் விடுமுறையை எப்படி முறையாகப் பயன் படுத்தலாம். எப்படித் திட்டமிடலாம் இதோ சில ஆலோசனைகள். குடும்பத்துடன் கடற்கரை, சினிமா, தீம் பார்க் சென்று வரலாம் என்று சிலர் திட்டமிடுவர். கோயிலுக்குப் போகலாம் என்று பிரபலமான ஆலயம் ஒன்றுக்கு செல்ல முடிவு செய்வர் சிலர். சிலர் ஷாப்பிங் சென்று வீட்டுக்குத் தேவையான (தேவையற்றதும்) பொருட்களை வாங்கலாம் என்று ஆசைப்படுவர். இப்படி ஒரு நாள் விடுமுறையை ஒருவழியாக கழித்து விடுவார்கள் பெரும்பாலானோர். ஆனால் சரியாகத் திட்டமிட்டு விடுமுறை நாட்களைப் பயன்படுத்த உடலுக்கும் மனதுக்கும் மிக அற்புதமான ஒரு இடைவேளை, ஓய்வு, உடன் ஒரு ரிபிரெஷ் கிடைக்கவும் வாய்ப்புகள் உண்டாகும்.
மற்ற நாட்களை விட விடுமுறை நாட்களில் அதிகாலையில் எழுந்துவிடுங்கள். அப்போதுதான் விடுமுறையை முழுமையாக அனுபவிக்காமல் தூங்குவதிலேயே பாதி நாளைக் கழித்துப் பிறகு சாப்பிட்டபின் குட்டித் தூக்கம் போடுவதால் விடுமுறை நாள் வீணாகப் போய்விடும். மற்ற நாட்களில் சீக்கிரம் எழுந்தாலும் கூட வீட்டுவேலைகள், பள்ளி, கல்லூரி, வேலைகளுக்கு கிளம்பும் அவசரம் என இப்படிக் கழியும். ஆனால் விடுமுறை நாட்களில் எழுந்து சிறிது நேரம் வெளியில் நடக்க எந்த அவசர வேலையும் இல்லாமல் எடுத்துக்கொள்ளும் நடைப்பயிற்சி உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வு கொடுக்கும். நீங்கள் மற்ற நாட்களில் நடைப்பயிற்சியே தவறாமல் சென்றால்கூட அவசரம் இல்லாமல் எவ்வித பொறுப்புகளும் இல்லாமல் நடக்கும் போது நமக்கே தெரியாமல் நம் தெருக்களில் இருக்கும் அழகு தென்படும். கோவில்களின் அழகு, பறவைகள் சத்தம், மாடுகள் பயணிக்கும் ஓசை துவங்கி அத்தனையும் காதில் விழ மனது லேசாகும். உடற்பயிற்சி செய்தாலும் கூட அதே நிலைதான். நன்கு உடற்பயிற்சி செய்துவிட்டு வீட்டில் ஒரு ஓரத்தில் அமைதியாக உட்கார்ந்து ஓய்வு எடுத்துப் பாருங்கள். வீட்டில் நாம் செய்ய வேண்டிய மாற்றங்கள், சின்னச் சின்ன பராமரிப்புகள் என தென்படும். ஏன் நம் வீட்டிலேயே நம் கண்களில் தென்படாத சில அழகான விஷயங்கள் கண்களுக்குப் புலப்படும். நமக்கே தெரியாமல் ஏதோ ஒரு பறவை தினம் நம் மொட்டை மாடிக்கு வந்துசெல்லும். வீட்டுச்செடிகளில் பூக்கள் பூத்திருப்பதை கவனிக்க நேரும். குழந்தைகள் அதிகாலையில் தூங்கும் அழகு நம்மால் கவனிக்க முடியும்.
பொழுதுபோக்கு இடங்களுக்கு குடும்பத்துடன் செல்லும் முன் வீட்டில் இருந்தே உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். பணமும், ஆரோக்கியமும் பாதுகாப்பாகும். விடுமுறை என்றாலே தூங்க வேண்டும் என்கிற மனநிலையை நீங்கள் மட்டுமின்றி குடும்பத்தார் மனதில் இருந்தும் நீக்கினால் அனைவரும் உதவ மிகக் குறைந்த கால நேரத்தில் உணவுகள், தின்பண்டம் என தயாரிக்கலாம். ஏனெனில் பலரும் சந்தோஷத்திற்காக செல்லும் பயணமே வெளிப்புற ஆகாரத்தால் மறுநாள் வயிற்று உபாதைகள் உருவாகி வேலைக்குப் போக முடியாதபடி செய்து விடும். எனவே உணவுக்கான திட்டமிடல் அவசியம். ஒருவேளை வெளிப்புற ஆகாரம் எனில் கூகுள் விமர்சனங்கள் படித்து, அதன்படி உணவகங்களைத் தேர்வு செய்வது நல்லது. கோயிலுக்குப் போக நினைப்பவர்கள். அதிக கூட்டம் இல்லாத அருகில் உள்ள ஆலயம் சென்று ஆண்டவனை தரிசித்துவிட்டு இல்லம் திரும்பலாம். தொலை தூரத்தில் உள்ள பிரபலமான கோயிலுக்குச் சென்று கூட்டநெரிசலில் சிக்கி இறைவனை சரியாக தரிசிக்காமல் அரை மனதுடன் திரும்புவதை தவிருங்கள். எல்லா கோயில்களிலும் ஆண்டவன் இருக்கிறார். குறிப்பிட்ட நாளில்தான் போக வேண்டும் எனில் கூடுமானவரை குழந்தைகளைத் தவிர்த்திடுங்கள். கூட்டம் அவர்களுக்கு பாதுகாப்பானதல்ல. மேலும் இன்னொரு நாளில் கூட கூட்டமில்லாமல் அவர்களுக்கு கடவுளைக் காட்டலாம்.
விடுமுறையில் ஷாப்பிங் சென்று கடைகடையாக ஏறி இறங்கி சில உபயோகமானப் பொருட்களையும் பல தேவையற்ற பொருட்களையும் வாங்குவதைத் தவிர்த்திடுங்கள். வாங்கும் போது தேவை அதிகமாக இருக்கும்படி தோன்றும் பல பொருட்கள் வாங்கிய பின் தூங்கத்தான் செய்யும். எனவே யோசித்து பொருட்களில் பணம் செலவிடுங்கள். ஷாப்பிங் செல்லும் முன் என்னென்ன பொருட்களை வாங்க வேண்டுமென்று லிஸ்ட் போட்டுக் கொள்ளுங்கள். வேலைக்கு செல்பவர்கள் வீட்டைப் பெரும்பாலும் பராமரிப்பதில்லை. அல்லது பராமரிக்க முடியவில்லை. அதற்கு உரிய நேரம் கிடைப்பதில்லை. விடுமுறை நாளன்று வீட்டிலுள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துவது, சுத்தம் செய்வது, ஒட்டடை அடிப்பது, தோட்டம் இருந்தால் பூந்தொட்டிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது போன்ற வேலைகளை செய்யலாம். குழந்தைகளையும் இதில் ஈடுபடுத்த முயற்சி செய்யலாம். வாரத்திற்கு ஒரு நாள் கிடைக்கும் விடுமுறை நாளை எப்படி கழிக்க வேண்டுமென்று சிந்தித்து திட்டமிடுங்கள். தவிர்க்க முடியாத திருமணம் போன்ற நிகழ்ச்சி, உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளுக்குக் குழந்தைகளுடன் சென்று வாருங்கள். இதனால் உறவுகள் மேம்படும். குழந்தைகளுக்கும் உறவுகளின் முக்கியத்துவம் தெரியும். எப்போதுமான டிவி, மொபைல் உலகில் இருந்து சிறு இடைவேளை கிடைக்கும். விடுமுறை நாளை வீட்டிலிருந்தபடியே பயனுள்ளதாகவும், மகிழ்ச்சி மிக்கதாகவும் கழிக்க திட்டமிடுங்கள். வாரத்திற்கு ஒரு நாள் ஓய்வு எடுப்பதற்குத்தான் விடுமுறை அளிக்கப்படுகிறது. வீட்டில் நமக்குப் பிடித்த வேலைகளைச் செய்வதும் கூட சிறந்த ஓய்வுதான்.
– டி. சத்யநாராயணன்
The post பண்டிகை வந்தாச்சு… லீவு விட்டாச்சு?! appeared first on Dinakaran.