சிவகங்கை, அக்.16: சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பிரசன்னா பிரியா தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கை விளக்க உரையாற்றினார்.
இதில் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல் எம்ஆர்பி தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்வது.
புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் உட்பட அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1,500 செவிலியர்கள் பணியிடங்களை எம்.ஆர்.பி தொகுப்பூதிய செவிலியர் கொண்டு உடனடியாக நிரப்ப வேண்டும். கொரோனா காலக்கட்டத்தில் இரண்டரை வருடங்கள் பணிபுரிந்து பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும். எம்.ஆர்.பி செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்புக்கான ஊதியத்தை வழங்கிட வேண்டும். காலமுறை ஊதியத்திற்கு ஈர்க்கப்பட்ட எம்.ஆர்.பி செவிலியர்களுக்கு பணி வரன்முறை செய்ய வேண்டும்.
பணியிடத்தில் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்களை விசாரிக்க அனைத்து மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். இதில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க துணை தலைவர், மாவட்ட துணை தலைவர் பாஸ்கரன், மாவட்டஇணைச் செயலாளர் பயாஸ் அகமது, வட்டக் கிளை துணை தலைவர் கலைச்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post பணி நிரந்தரம் கேட்டு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.