கோவை: முதல்வர் குடும்பத்தினர் உள்பட திமுகவினர் நடத்தும் சிபிஎஸ்சி பள்ளிகள் மூலம் பணம் சம்பாதிக்க மும்மொழி வேண்டும். மறுபுறம் மக்களை ஏமாற்ற இருமொழி என்ற நிலைப்பாடு கொண்டிருப்பதாக, ஹெச்.ராஜா தெரிவித்தார்.
பாஜக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் கோவை, சுந்தராபுரம் பகுதியில் ஞாயிறு மாலை நடந்தது. இதில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா கலந்து கொண்டு பேசினார். முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “தமிழகம் முழுவதும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பாஜக மத்தியில் ஆட்சியமைத்த போது வருமான வரி உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாக இருந்தது. 2019-ம் ஆண்டில் பாஜக அரசு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தியது.